Loading...

தாழ்மையாயிருங்கள்!

Shilpa Dhinakaran
25 Jan
வேதத்தில் மனத்தாழ்மைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு, இயேசு கிறிஸ்து தமது சீஷர்களின் கால்களைக் கழுவுதலாகும். இந்த பிரபஞ்சத்தின் படைப்பாளர், நம் அனைவருக்கும் மேலாக தன்னைத் தாழ்த்தி, தமது சீஷர்களின் கால்களைக் கழுவ முடிவு செய்தார். இந்த மேலான தாழ்மையை நாமும் பின்பற்ற வேண்டும். நமது முழு வாழ்க்கையையும் தேவனிடத்தில் அர்ப்பணிப்போம். அவருக்காக நாம் ஒரு அடி முன்வைக்கும்போது, அவர் நம்மை உன்னதத்திற்கு உயர்த்துவார். மற்றவருக்கு முன்பாக நாம் தாழ்மையுடன் இருக்க வேண்டும் (1 பேதுரு 5:5) என்பதையே வேதம் நமக்கு வலியுறுத்துகிறது. நீங்கள் மற்றவர்களுக்கு முன்பாக தாழ்மையுடன் இருக்கும்போது, கிறிஸ்துவை பிரதிபலிக்கிறீர்கள். ஜனங்கள் உங்களில் கிறிஸ்துவைக் காண்பார்கள். 

பென் என்ற ஒரு மனிதனைப் பற்றிய கதை இது. அவர் ஒவ்வொரு நாளும் தேவாலயத்தின் பீடத்தண்டையில் முழங்காலிட்டு பிரார்த்தனை செய்வார். தேவனுக்கு முன்பாக முற்றிலும் தன்னைத்தாழ்த்தினார். அவருக்கு ஜெபிக்க தெரியாது. “ஹலோ இயேசுவே, நான் பென் வந்திருக்கிறேன்” என்ற வார்த்தைகளை மாத்திரமே தினமும் சொல்லுவார். ஒவ்வொருநாளும் பென் ஆலயத்திற்கு வந்து தனிமையில் அமர்ந்திருப்பதை அந்த ஆலயத்தின் போதகர் கவனித்தார். சில மாதங்கள் கடந்தன. பென் ஆலயத்திற்கு வருவதில்லை என்பதை அறிந்த போதகர், அவர் சுகவீனமாயிருப்பதை கேள்விப்பட்டு, அவரை காணும்படி மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவமனையில் பென் தனியாக கட்டிலில் அமர்ந்திருந்தார். போதகர் அவர் அருகில் அமர்ந்து, தாம் முன்னதாகவே அவரை பார்க்க வரமுடியாமல் போனதற்காக மன்னிப்பு கேட்டார். ஆனால் பென் சிரித்துக்கொண்டே, “இல்லை போதகர் ஐயா, ஒவ்வொரு நாளும் வெள்ளை நிற உடையணிந்து ஒரு நபர் வந்து என்னை பார்த்துச்செல்வார். அவர் என் அருகில் அமர்ந்து, “ஹலோ பென், நான் இயேசு வந்திருக்கிறேன்” என்று கூறுவார். அதன் பிறகு போய்விடுவார். நான் மருத்துவமனையில் சேர்ந்த நாள் முதற்கொண்டு தினமும் அவர் என்னை காண வருவார்” என்று கூறினான். 
ஆம் எனக்கன்பானவர்களே, நம்முடைய தேவன் பிதாவுக்கு முன்பதாக தரைமட்டும் தன்னை தாழ்த்தினார். “தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்” (யாக்கோபு 4:6) என்று வேதம் கூறுகிறது. எப்பொழுதும் எல்லாவற்றிலும் தாழ்மையாயிருங்கள். தேவன் நிச்சயமாக உங்களை ஆசீர்வதிப்பார். இவ்வுலக காரியங்கள் எல்லாவற்றையும் குப்பையாக எண்ணி தூக்கியெறிந்துவிட்டு, இயேசுவை மட்டுமே பற்றிக்கொண்டு நீங்கள் வாழும்போது, அவர் உங்களை உயர்த்துவார். இவ்வுலகத்துக்குரிய செல்வ செழிப்பையும், பட்டங்களையும் நீங்கள் பெற்றிருந்தாலும்,  கிறிஸ்துவுக்கு முன்பாக உங்களை தாழ்த்தி அர்ப்பணியுங்கள். “தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” (மத்தேயு 23:12) என்று இயேசு கூறியிருக்கிறார், ஆம், நீங்கள் தாழ்மையானவர்களாய் வாழ்ந்தால் தேவன் நிச்சயமாக உங்களை ஆசீர்வதிப்பார். எப்பொழுதும் தாழ்மையுடனும், கனிவுடனும் நடந்துகொள்ளுங்கள். 
Prayer:
கர்த்தராகிய இயேசுவே,

எந்த நிலையில் நான் இருந்தாலும் நீர் என்னை மறவாததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உமக்கு முன்பதாகவும், மற்றவர்களிடமும் நான் எப்போதும் தாழ்மையுடன் இருக்க எனக்கு உதவும். எல்லா நேரங்களிலும் உமது மனத்தாழ்மையை பிரதிபலிக்க எனக்கு கற்றுத்தாரும். நான் செய்கிற ஒவ்வொரு காரியங்களிலும் என்னை மறைத்து நீர் வெளிப்படும். தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” என்ற வார்த்தையின்படி, நீர் என்னை உயர்த்தப்போவதற்காக உமக்கு கோடானகோடி ஸ்தோத்திரம். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000