Loading...

வார்த்தையினால் நிறைந்திருங்கள்!

Bro. D.G.S Dhinakaran
19 Aug
 “பூமியின்மேல் அக்கினியை போடவந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்” (லூக்கா 12:49) என்று இயேசு கூறிச்சென்றார். அக்கினி என்பது தேவனுடைய வார்த்தையை குறிக்கிறது. தேவனுடைய வசனங்கள் ஆவியாயம் ஜீவனாயும் இருக்கிறது (யோவான் 6:63). பரிசுத்த ஆவியானவர் வருவதற்கு முன்பாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகத்தில் வார்த்தையாக வெளிப்பட்டார். வேத வசனங்களால் மட்டுமே நம்மை தேவனுடைய பாதையில் வழிநடத்த முடியும். “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” (சங்கீதம் 119:105) என்று சங்கீதக்காரன் கூறுகிறான். ஆம், நம்முடைய வாழ்க்கையை வேதவசனங்களோடு ஒப்பிட்டு பார்த்து, குறைவுகளை சரிசெய்து, பரிசுத்த ஆவியானவரை கேட்போம், அப்பொழுது அவர் நம்மை நிரப்புவார். இயேசு தமது சீஷர்களை அபிஷேகிப்பதற்கு முன்பதாக தமது வார்த்தையினால் அவர்களை நிரப்பி, ஊழியத்திற்கு அவர்களை ஆயத்தப்படுத்தினார்.

ஒரு சமயம், ஞாயிறு வேதாகமப் பள்ளி ஒன்றிற்கு இங்கிலாந்து மன்னர் வருகை புரிந்தார். அவர் இடது கையில் தங்கத்தினால் செய்யப்பட்ட மாலை ஒன்றையும், வலது கையில் அழகிய வேதாகம புத்தகம் ஒன்றையும் வைத்திருந்தார். கண்களைக் கவரும் வனப்புடையதாயிருந்தது அவர் கையிலிருந்த மாலை! வேதாகமப் பள்ளியிலிருந்த இரு மாணவர்களிடம் அரசர் தம் கரங்களில் ஏந்தியிருந்த இரண்டில் எதனை அவர்கள் பெற விரும்புகிறார்கள் என்று கேட்டார். முதல் பையன் கண்ணைப் பறிக்கும் பொன் மாலையைத் தான் விரும்புவதாகக் கூறினான். அடுத்த பையனோ மிகவும் ஏழ்மையிலிருந்தும், அரசரைப் பார்த்து, “ஐயா, நான் வேதாகமத்தையே பெற விரும்புகிறேன். ஏனெனில், என் தாயார் வேத புத்தகத்தைத்தான் உலகிலேயே மிக விலையுயர்ந்த பொக்கிஷம் என்று கூறியிருக்கிறார்கள். எனவே, அதையே எனக்கு தாருங்கள்” என்று பணிவுடன் கேட்டுக்கொண்டான். அரசர் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருவருக்கும் அவர்கள் கேட்டுக்கொண்டதைக் கொடுத்தார். வேதபுத்தகத்தைப் பெற்று சிறுவன் அதை திறந்து பார்த்தான். என்னே ஆச்சரியம்! வேதாகமத்தின் ஒவ்வொரு இதழிலும் பொன் ஏடுகள் இருக்கக் கண்டான்! அரசர் புன்முறுவலுடன் அவனை நோக்கி, “மகனே, நீ கண்கவரும் ஒரு பொன் மாலையைவிட வேதாகமத்தையே மிகவும் மதித்து, அதைப்பெற முழுமனதுடன் விரும்பியதால், அதனுள் இந்த பொன்மாலையைவிட எத்தனையோ மடங்கு விலையேறப்பெற்ற பொன் ஏடுகள் அடங்கியுள்ளன. நீயே பாக்கியவான்” என்று பாராட்டினார்! எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் தேவனுடைய வார்த்தையை விரும்பும்போது ஆண்டவரும் நம்மை இவ்வாறே ஆசீர்வதிப்பார்.
“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” (மத்தேயு 6:33) என்று இயேசு கூறுகிறார். நாம் தேவனுடைய வார்த்தையை வாசித்து, அவருடைய வழியில் நடக்கும்போது, ஆவிக்குரிய ரீதியாகவும், இவ்வுலக ரீதியாகவும் ஆசீர்வதிக்கப்படுவோம். நாம் தேவனுடைய வார்த்தையினால் நிரம்பி பரிசுத்த ஆவியானவரை பெற்று, அவருக்கு வல்லமையாய் ஊழியம் செய்ய வேண்டும். எந்தளவு நாம் தேவனுடைய வார்த்தையில் நிரம்பியிருக்கிறோமோ, அந்தளவு அபிஷேகமும் நம்மில் பெருகும். வேதவசனங்களை நம் இருதயத்தில் பதித்து வைக்கும்போது, ஏற்ற நேரத்தில், பரிசுத்த ஆவியானவர் சரியான வார்த்தையை தீர்க்கதரிசனத்தின் மூலமாக வெளிப்படுத்தி நம்மை வழிநடத்துவார். “என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” (யோவான் 14:26). ஆகவே, தேவனுடைய வார்த்தையினாலும் அவருடைய அபிஷேகத்தினாலும் நிரப்பப்படுவோம்.
Prayer:
அன்பின் தேவனே,

உம்முடைய வார்த்தைகளை வாசித்து, அவற்றை என் இருதயத்தில் சேமிக்க எனக்கு உதவும். உமது பரிசுத்த ஆவியால் என்னை அபிஷேகித்து, உமது தீர்க்கதரிசன வார்த்தையின் மூலம் என்னை வழிநடத்தும். உம்மோடு நெருங்கி ஜீவிக்கும் வாழ்வை தந்தருளும். உமது வல்லமையால் என்னை நிரப்பி, உமக்கு சாட்சியாய் வாழ கிருபை செய்தருளும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000