Loading...

தன் நாவை காக்கிறவன் ஜீவனை காக்கிறான்!

Stella Ramola
21 Jan
நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும், ஜீவனை காத்துக்கொள்வதற்கும் உங்கள் வாயின் வார்த்தைகளை காத்துக்கொள்ள வேண்டியது  மிகவும் முக்கியமான ஒரு காரியம்.  “ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து, நன்மை செய்து, சமாதானத்தைத்தேடி அதைப் பின்தொடரக்கடவன்” (1 பேதுரு 3:10,11) என்று வேதம் கூறுகிறது. ஆம், தன்னுடைய வாயைக் காக்கிறவன் நன்மையை பின்தொடருகிறான். ஆகவே, உங்கள் வார்த்தைகளை கவனித்து பேசுங்கள். இல்லையென்றால், அவைகள் உங்களை அழித்துவிடும். பாடம் எளிமையானது தான்; ஆனால் அதன் விளைவோ பெரியவைகள்.

ஒரு கிராமத்தில் மாடு மேய்க்கிற சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் ஒவ்வொரு நாளும் தன் மாடுகளை மேய்ச்சலுக்காக காட்டுப்பகுதிக்கு அழைத்துச் செல்வான். அந்த சிறுவன் ஒரு விளையாட்டு பிள்ளை. ஒருநாள், அவன் பசுக்களுக்கு மேய்ச்சல் காட்டிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று, “புலி வந்துவிட்டது உதவிச்செய்யுங்கள்” என்று அலறினான். சிறுவனுடைய குரலை கேட்ட கிராமத்து ஜனங்கள் அவனை காப்பாற்றும்படி கம்புகளையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு காட்டிற்குள் விரைந்தனர். அனைவரையும் பார்த்த சிறுவன் சிரித்துக்கொண்டே, “இங்கே எந்த புலியும் வரவில்லை” நான் விளையாட்டிற்கு கூறினேன் என்றான். மறுநாளும் சிறுவன் அதே தந்திரத்தை உபயோகித்தான். மீண்டுமாக கிராமத்தினர் அவனை காப்பாற்றும்படி ஓடிவந்தனர். அவன் சிரித்துக்கொண்டே, “புலியொன்றும் வரவில்லை” எனக் கூறினான். கிராமத்தினர் கோபத்துடனே திரும்பிச்சென்றனர். சில நாட்களுக்கு பிறகு ஒருநாள், உண்மையாகவே புலி வந்துவிட்டது. அவன் அழுதுகொண்டே சத்தமிட்டு உதவிச்செய்யும்படி அழைத்தான். ஆனால், கிராமத்தினருக்கு அவன் குரல் கேட்டும் அவர்கள் அவனுக்கு உதவ முன்வரவில்லை. காரணம், அவன் இம்முறையும் தங்களை ஏமாற்றும்படி இப்படிச் செய்கிறான் என நினைத்து அவனுக்கு உதவிச்செய்ய போகாமல் அமைதியாய் இருந்து விட்டனர். அந்த ஏழைச் சிறுவனும், மாடுகளும் புலிக்கு இரையாயின. 
நீங்கள் பொய்யுரைப்பீர்களானால், உங்கள் வாழ்க்கை ஆபத்தாக முடிந்துவிடும். சத்தியத்தை பேசுங்கள். வேதத்தில், யூதர்களுடனான சந்திப்பில் இயேசுவுடன் ஒரு தர்க்கம்  ஏற்படுவதைக்குறித்து நாம் வாசிக்கிறோம். அப்பொழுது இயேசு, “உங்கள் பிதாவாகிய பிசாசானவன் பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான் (யோவான் 8:44) என்று சொன்னார். பிசாசானவனே பொய்யுக்கு பிதாவாயிருக்கிறான். ஆனால், உங்களுக்கும் எனக்கும் நம்முடைய பரம பிதாவானவரே தகப்பனாயிருக்கிறார். ஆகவே, நம்முடைய வார்த்தையில் நாம் கவனமாயிருக்க வேண்டும். உங்கள் உரையாடல்கள், பேச்சுக்களைக்குறித்து நீங்கள் மிகவும் கவனமாயிருங்கள். அப்பொழுது இயேசு உங்கள் மூலம் வெளிப்படுவார். நீங்கள் அவருக்கு சாட்சியாயிருப்பீர்கள். அதுமாத்திரமல்ல, ஆண்டவர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பார். 
Prayer:
சர்வ வல்லமையுள்ள தேவனே,

உம்முடைய வார்த்தைக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். உம்முடைய வார்த்தை என்னை சரியான பாதையில் நடத்துவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் உரையாடலின்போது நான் கவனமாயிருக்கும்படி உம்முடைய தெய்வீக ஞானத்தை எனக்கு தந்தருளும். இதுவரையிலும் நான் பேசிய தவறான வார்த்தைகளுக்காக என்னை மன்னித்தருளும். மற்றவர்களை காயப்படுத்தாத வார்த்தைகளையே பேச எனக்கு கிருபை செய்தருளும். சத்தியமும் நியாயமுமானவைகளையே பேச கிருபை செய்தருளும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, 

ஆமென். 

1800 425 7755 / 044-33 999 000