
நீங்களே இயேசுவின் சிநேகிதர்
அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். "என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்" (நீதிமொழிகள் 8:17) என்று கர்த்தர் கூறும் அருமையான வாக்குத்தத்தத்தை இன்று தியானிப்போம்.
நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம் கர்த்தரை தன் முழு இருதயத்தோடும் நேசித்ததை குறித்து வேதத்தில் வாசிக்கிறோம். ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன் என்று அழைக்கப்பட்டான் (ஏசாயா 41:8; 2 நாளாகமம் 20:7; யாக்கோபு 2:23). அன்பு சகோதரரே / சகோதரியே, நீங்கள் தேவனுக்கு சிநேகிதமான முறையில் வாழ்கிறீர்களா? அவரே உங்களுக்கு ஒரே நண்பராக இருக்கிறாரா? ஆண்டவருடனான உங்கள் உறவை இன்று சீர்தூக்கிப் பாருங்கள். உங்களுடைய மற்ற நண்பர்களையும் இயேசுவையும் ஒன்றுபோல் நினைக்காதீர்கள். இயேசுவை, எவ்வகை மனுஷீக அன்போடும் ஒப்பிட இயலாது. அவரே உங்கள் உண்மையான சிறந்த நண்பராவார். தனிப்பட்ட முறையில் என் வாழ்க்கையில் இயேசுவை தவிர எனக்கு வேறு தோழியர் கிடையாது. ஆகவேதான் ஆண்டவர் இன்று வரைக்கும் என்னை கிருபையாக ஆசீர்வதித்து வருகிறார். அப்படியே ஆபிரகாமும் கர்த்தரை தேடுவதில் ஜாக்கிரதையாயிருந்தான்; அவரை உண்மையாய் பின்பற்றினான். ஆபிரகாமின் இருதயத்தை தேவன் தமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக்கண்டார் என்று வேத வசனம் சாட்சி கொடுக்கிறது (நெகேமியா 9:8). "உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்" (நீதிமொழிகள் 12:22) என்றும், "கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்" (2 தெசலோனிக்கேயர் 3:3) என்றும் வேதத்தில் வாசிக்கிறோம்.
பரம தகப்பனே, உம்முடைய வசனத்தின் மூலம் என்னோடு பேசியதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இப்போதும் என்னுடைய வாழ்க்கையை உம்முடைய அன்பின் கரங்களில் சமர்ப்பிக்கிறேன். என்னுடைய குறைகள் எல்லாவற்றையும் தயவாய் மன்னியும். என் வாழ்விலிருந்து எல்லா அநீதிகளையும் அகற்றும். என்னுடைய இருதயத்தை உம்முடைய பிரசன்னத்தால் நிரப்பும். முழு இருதயத்தோடும் உம்மை ஜாக்கிரதையாய் தேடுவதற்கு எனக்கு உதவும். நீர் எனக்கு உண்மையுள்ளவராயிருப்பதுபோல், நான் உமக்கு உண்மையாயிருக்க எனக்கு உதவும். உம்மோடு உறுதியான சிநேகிதத்தை வளர்த்துக்கொள்ளவும், என்னுடைய வழிகள் எல்லாவற்றிலும் உமக்கு பிரியமாய் இருக்கவும் எனக்கு உதவும். என் வாழ்க்கையை முற்றிலுமாய் மாற்றும். ஆபிரகாமை நீர் ஆசீர்வதித்ததுபோல என்னையும் ஆசீர்வதியும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.