Loading...

வியத்தகு அழகு!

Bro. D.G.S Dhinakaran
16 Jan
கோடிக்கணக்கான ஜனங்கள் தங்கள் வயதை தாண்டியும், அவர்களுடைய தோற்றத்தைக் குறித்த சந்தேகங்கள் அவர்களுக்கு உள்ளது. அனைவருமே அவரவர் தோற்றத்தில் அழகாக இருக்க விரும்புகின்றனர். உலகெங்கிலும் உள்ள பிரபலங்கள் கூட சில நேரங்களில் அழகற்றவர்களாக உணர்ந்திருக்கிறார்கள். ஜனங்கள் தங்கள் மருக்கள், காணாமல் போன பற்கள்,  நீண்ட காதுகள், மெல்லிய கண்கள், உடலிலுள்ள கொழுப்பு போன்றவற்றை பிரச்சினைகளாக நினைக்கின்றனர். ‘நீங்கள்’ யார் என்பதை பற்றி மற்றவர்களின் கருத்துக்களால் சோர்வடையவேண்டாம். ‘உங்கள் நிஜத்தை’ காட்டும்  மிகச்சரியான கண்ணாடியாகிய தேவனுடைய வார்த்தையை நோக்கிப்பாருங்கள்.  உங்கள் உள் அழகையும், வெளி அழகையும் சிறந்ததாக பிரதிபலிக்க செய்கிற வல்லமை தேவனுடைய வார்த்தைக்கு உண்டு என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

ஈரானிலுள்ள தெஹ்ரானில் தங்கம் மற்றும் வைரங்களால் பொறிக்கப்பட்ட விலைமதிப்பற்ற ஆபரணங்களாகிய பண்டைய நகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒருமுறை இந்த இடத்தைப் பார்வையிட எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த அருங்காட்சியகத்திற்குள் விலையுயர்ந்த ரத்தினங்கள் மற்றும் வைரங்கள் பதிக்கப்பட்டிருந்த கிரீடங்கள், மெழுகுவர்த்தி ஸ்டாண்டுகள், ப்ரூச்சுகள்,  பெல்ட்டுகள் ஆகியவற்றை பார்வையிட்டேன். அதின் அழகில் என் மனம் சுழன்றது. பல பாதுகாப்பு அதிகாரிகளால் பாதுகாக்கப்பட்ட ஒரு பெரிய வைரத்தை நான் கவனித்தேன் . ஆர்வத்துடன் “இந்த வைரத்தின் சிறப்பு என்ன?” என்று என்னுடைய பயண வழிகாட்டியிடம் கேட்டேன், அவர் எனக்கு அதை விலக்கி கூறினார். “இந்த வைரம் ஒரு கோணத்தில் பச்சை நிறமாகவும், மற்றொரு கோணத்தில் நீலநிறமாகவும், மற்றொரு கோணத்தில் ஆரஞ்சு நிற கதிர்களையும் பிரதிபலிக்கிறது. இதன் மதிப்பு 33 கோடி ஆகும்” என்றார். கண்கவர் வைரங்களின் சேகரிப்புகளை பார்வையிடுகிற எவரும் அதில் மயங்கி மூழ்கிவிடுவார்கள்.
நம் மனதை ஈர்க்கிற இந்த காந்த அழகுக்கு இடையில், உண்மையான அழகைப்பற்றி தேவன் கூறியிருப்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், அது “நீங்கள் தான்.” நீங்கள் தேவனுடைய பார்வையில் ஒரு விசேஷித்த வைரமும், குறையில்லாத  மாணிக்கமுமாவீர்கள். பிரியமானவர்களே, நீங்கள் வெறும் வைரங்கள், மரகதங்கள், மாணிக்கங்களை கண்டு மயங்கி போவதினால், உங்களுடைய உண்மையான மதிப்பு உங்களுக்கு தெரிவதில்லை.  உங்களை படைத்தவர் உங்களைப் பார்த்து, “என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை” (உன்னதப்பாட்டு 4:7) என்று பாடுகிறார். நீங்கள் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், அவரை துதியுங்கள் (சங்கீதம் 139:14). பரமபிதாவின் பிரசன்னத்தில் எப்பொழுதும் சமாதானத்துடன் சந்தோஷமாயிருங்கள். 
Prayer:
அன்புள்ள ஆண்டவரே,

நீர் அழகாய் உருவாக்கிய ‘என்னை’ நான் துன்புறுத்தியதற்காக மன்னித்தருளும்.  உம்மை பிரதிபலிக்கும் அமைதியான, அன்பின் ஆவியை எனக்கு தாரும். ஒவ்வொரு நாளும் உமது வார்த்தையால் என்னை சுத்திகரியும். நான் உமது சாயலில் உருவாக்கப்பட்டிருக்கிறபடியால், பரிசுத்தத்தை காத்துக்கொள்கிற கிருபையை தாரும். இந்த பூமியில் உமது நோக்கத்தை நிறைவேற்றுகிற கீழ்ப்படிதலை எனக்குத்தாரும்.  உமது நன்மையையும், மகத்துவத்தையும் மற்றவர் அறிந்துகொள்கிற சாட்சியாக என்னை வழிநடத்தும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000