Loading...
Stella dhinakaran

சர்வவல்லவர் உதவிச்செய்வார்!

Sis. Stella Dhinakaran
09 Jun
சாறிபாத் என்னும் ஊரில் ஒரு விதவையிருந்தாள். அவளுக்கு ஒரே ஒரு குமாரன் இருந்தான். அவள் பஞ்சத்தின் மிகுதியால், வறுமையில் ஊசலாடிக்கொண்டிருந்தாள். அன்று அவளும், அவள் மகனும் சாப்பிடுவதற்கான உணவு மாத்திரமே மீதமிருந்தது. அந்த ஆகாரத்தை செய்வதற்கு விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாள். அப்படிப்பட்ட நிலைமையிலிருந்த அவளிடம், தேவனால் அனுப்பப்பட்டார் எலியா என்ற தீர்க்கதரிசி. அவளோ ஏழை! அடுத்த வேளை ஆகாரம் எங்கிருந்து வரும் என்று தெரியாத நிலை! இப்படிப்பட்ட விதவையிடம் தேவன் ஒரு விருந்தாளியை அனுப்பி வைக்கிறார். பெண்களாகிய நமக்கு அடிக்கடி இப்படிப்பட்ட சிக்கல்கள் வரும்போது, ஆண்டவரே ஏதாகிலும் செய்தருளும் என்று தேவனிடத்தில் கேட்கிறோம் அல்லவா! இந்த கடைசி உணவுக்கு பின் தான் வாழ வழியில்லை என்ற நிலையிலும், அந்த விதவைப்பெண் தேவமனிதருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தாள். ஆனால், தேவன் அவளுக்கு செய்ததை பாருங்கள். அவள் விசுவாசத்துடன் தனது தீர்மானத்தின் வட்டத்திற்குள்ளிருந்து வெளியே அடியெடுத்து வைத்தாள். அந்த விசுவாசம் அவள் ஜீவனை இரட்சித்தது.

பல வருடங்களுக்கு முன்பு என் சிறிய குடும்பத்திற்கேற்றார்போல் சமைத்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது என் சகோதரியும் என்னோடிருந்தார்கள். திடீரென்று உணவருந்தும் வேளையில் எதிர்பாராத விருந்தினர் சிலர் வந்து சேர்ந்தனர். என்ன செய்வதென்று ஒருபுறம் கலக்கம் வந்தாலும், மறுபுறம் தேவனை நோக்கி மனதில் பிரார்த்தனை செய்துகொண்டே அவர்களுக்கு பரிமாறத்துவங்கினேன். என்ன ஆச்சரியம்! “தேவன் தம்மை நம்புகிறவர்களை ஒருபோதும் கைவிடுகிறதில்லை” என்ற வார்த்தை நூற்றுக்கு நூறு உண்மையானது என்பதை அன்று திட்டவட்டமாய் அறிந்துகொண்டேன். யாவரும் திருப்தியாக உண்டபின் மீதியும் இருந்தது. என் சகோதரியும் “எப்படி சமாளிக்கப்போகிறாய் என்று நான் அதிகமாய் கலங்கிக்கொண்டிருந்தேன்” என்று சொன்னார்கள். ஆம், “கர்த்தரே அதை வாய்க்கச் செய்தார்”. இது ஒரு சிறிய சாதாரணமான அனுபவமாக இருந்தாலும், கர்த்தர் அன்று செய்த அந்த அற்புதத்தை நான் என்றும் மறப்பதேயில்லை.
ஐந்து அப்பத்தையும், இரண்டு மீன்களையும் ஐயாயிரம் பேருக்கு கொடுத்து போஷித்த ஆண்டவர் நம்மோடு இருக்கிறார். தேவனுடைய வார்த்தை நேற்றும் இன்றும் என்றும்  மாறாதது (எபிரெயர் 13:8). உங்கள் சூழ்நிலைகள் மாறக்கூடும், தேவன் ஒருபோதும் மனம்மாறமாட்டார். நீங்கள் எதிர்பார்த்திருக்கும் அற்புதத்தை உங்கள் வாழ்வில் செய்து உங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணுவார். “கடைசியாக, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்” (எபேசியர் 6:10) என்று வேதம் கூறுகிறது. சர்வ வல்லமையுள்ள தேவன் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். அவர் வல்லமையுள்ளவர், அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. இன்று உங்கள் மனதை அழுத்திக்கொண்டிருக்கும் கவலைகள் எதுவாயிருப்பினும், அந்த பிரச்சினைகளை மாற்ற தேவன் வல்லவர் என்ற உண்மையை முழுமனதுடன் நம்புங்கள். தேவசமாதானம் உங்களை இருதயத்தை நிரப்புவது மட்டுமல்லாமல், தேவனிடமிருந்து வரும் அதிசயத்தையும் நீங்கள் காண்பீர்கள். உங்கள் சாட்சியை எதிர்பார்த்து நான் காத்திருக்கிறேன்.
Prayer:
அன்புள்ள ஆண்டவராகிய இயேசுவே,

நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். என்னிடமுள்ள சிறியதை பெருக்கி, என் தேவைகளை அனைத்தையும் நான் நினைப்பதற்கும் மேலாக பூர்த்தி செய்வீர் என்று நான் நம்புகிறேன். நீர் சர்வவல்லமையுள்ளவர் என்பதை நான் முழுமையாய் விசுவாசிக்கிறேன். அளவில்லாத ஆசீர்வாதங்களால் நீர் என்னை திருப்தியாக்குவீர். உமது விசுவாசத்தில் என்னை வேரூன்றச் செய்தருளும். எல்லாவற்றையும்விட நான் உம்மையே அதிகமாய் நேசிக்கிறேன். ஆகையினால் உமது பிரசன்னம் எனக்குள் எப்போதும் தங்கியிருக்க வேண்டுமாய் விரும்புகிறேன். ஒவ்வொரு காரியத்திலும் உமது கரம் என்னை வழிநடத்தட்டும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000