Loading...
Dr. Paul Dhinakaran

அளவற்ற ஆசீர்வாதம்!

Dr. Paul Dhinakaran
06 Sep
நான் சிறுவயதாயிருக்கும்போது, என் தாத்தாவுடன் சந்தைக்கு சென்றிருக்கிறேன். அவர்கள் மீன் பேரம் பேசி வாங்குவார்கள். மீன் வாங்கிய பிறகு, கடைசியில் என் தாத்தா மீன் விற்கும் அம்மாவிடம், ‘கொஞ்சம் கூடக் கொடும்மா’ என்பார். இல்லாவிட்டால், அந்த அம்மாவே, “நான் உங்களுக்குக் கொஞ்சம் கூடுதலாகப்போடுகிறேன்” என்பார்கள். மீன் வாங்கியபின், அத்துடன் இலவசமாகக் கிடைக்கும் மீனைக் குறித்துதான் நாங்கள் அதிகம் சந்தோஷமடைவோம். இந்த அம்மா மீன் கூடுதலாகக் கொடுத்துவிட்டார்கள் என்று சந்தோஷமாய் வீடு திரும்பி வருவோம். ஆனால், பிரியமானவர்களே, ஆண்டவர் நமக்கு ஆசீர்வாதங்களை கூடுதலாகக் கொடுக்கும்பொழுது, அந்த ஆசீர்வாதங்களை நம்மால் சுமக்கவே முடியாது. அவர் அவ்வளவு பெரிய கிரியைகளை நடப்பிப்பவர். இன்றைக்கு ஆண்டவர் சகல காரியங்களிலும், நீங்கள் கேட்கிற எல்லாவற்றிலும், உங்களுக்கு ஆசீர்வாதங்களைக் கூட்டிக் கொடுக்கப்போகிறார். நீங்கள் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது நீங்கள் கேட்காத எல்லாவற்றையும் அவர் உங்கள் வாழ்வில்  கூடுதலாக கொடுப்பார்.

சென்னையில் வசிக்கும் ஆனந்த செல்வத்தின் சாட்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்: “நான் இயேசுவின் அன்பை அறியாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். சாதாரண ஒரு டீக்கடை வைத்து என் குடும்பத்தை நடத்தி வந்தேன். நஷ்டத்தின் மேல் நஷ்டம். மிகுந்த தரித்திரம் ஏற்பட்டு செய்வதறியாது திகைத்து நின்றேன். ஆறு அல்லது ஏழு வருடங்களுக்கு முன்பாக என்னுடைய நண்பர் ஒருவர் என்னை ‘இயேசு அழைக்கிறார்’ Dr. DGS தினகரன் நினைவு ஜெபகோபுரத்திற்கு சென்று ஜெபிக்கும்படி வழிநடத்தினார் அங்கு ஏறெடுத்த ஜெபத்தின் மூலமாக, தேவசமாதானம் என்னை நிரப்ப ஆரம்பித்தது. கையில் பணமே இருக்காது. பேருந்தில் சென்று வருவதற்கு மட்டும் பணம் வைத்திருப்பேன். இப்படியாக, என் மனைவி பிள்ளைகளோடு தொடர்ந்து அங்கு நடைபெறும் கூட்டங்களில் பங்குபெற ஆரம்பித்தேன். இவ்வழியே தேவனோடுள்ள என்னுடைய ஐக்கியம் வளர ஆரம்பித்தவுடன், என் ஆசீர்வாதங்கள் பெருக ஆரம்பித்தது. ஒன்றுமில்லாமல் இருந்த எனக்கு பணம் வந்தது. நல்ல உத்தியோகம் கிடைத்தது. எனக்கொன்று, என் மனைவிக்கொன்றுமாக இரண்டு இரு சக்கர வாகனங்கள், ஒரு நிலம் என ஆசீர்வாதங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. இப்பொழுது அந்த நிலத்தில் ஒரு வீடு கட்ட ஆரம்பித்து உள்ளேன். தொடர்ந்து ஜெபகோபுர ஊழியங்களுக்கு காணிக்கை செலுத்தி வருகிறேன். ‘இயேசு அழைக்கிறார்’ ஊழியங்கள் என்னை போன்ற திக்கற்றவர்களுக்கு அடைக்கலமாகவே இருந்து வருகிறது. கிறிஸ்துவுக்கே மகிமை!” 
இந்த நபருடைய இல்லாமையை மாற்றி அளவற்ற ஆசீர்வாதத்தால் நிரப்பிய ஆண்டவர், உங்களுக்கும் நீங்கள் விரும்புவதை பார்க்கிலும் அதிகமாய் கொடுத்து ஆசீர்வதிப்பார். ஒருவேளை உங்களுடைய அடிப்படை தேவைகளை சந்திக்கும்படி ஆண்டவரிடத்தில் நீங்கள் கேட்கலாம். ஆனால், அவரோ நிரம்பி வழிகிற ஆசீர்வாதங்களை உங்களுக்கு தருவார். “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவர்” (எபேசியர் 3:20) என்று வேதம் கூறுகிறது. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேடுங்கள். அப்பொழுது கர்த்தருடைய சிறந்த ஆசீர்வாதங்களை நீங்கள் பெற்று அனுபவிப்பீர்கள். மனம் கலங்காதிருங்கள்!
Prayer:
அன்பின் தகப்பனே,

நீர் என் வாழ்க்கையில் தந்தருளின அளவில்லா ஆசீர்வாதங்களுக்காக உமக்கு நன்றி. முதலாவது உமது ராஜ்யத்தையும் நீதியையும் தேடும்படி வழிநடத்தும். அப்பொழுது நீர் எல்லா ஆசீர்வாதங்களையும் கூடக்கொடுப்பீர் என்பதை விசுவாசிக்கிறேன். என் இருதயத்தை சரியான வழியில் காத்துக்கொள்ளவும், உம்மை பிரியப்படுத்துகிற வழியில் நடக்கவும் கிருபை தாரும். உமது வார்த்தை எனக்கு மகிழ்ச்சியாயிருக்கட்டும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000