Loading...
Dr. Paul Dhinakaran

நன்மைகள் பெருகும்!

Dr. Paul Dhinakaran
02 Aug
எனக்கு அருமையானவர்களே, ஆண்டவர் இந்த நாளிலும் உங்களை நேசித்து பராமரித்து, அவருடைய சகல பாக்கியங்களினாலும் நிரப்பி உங்களை மகிழச்செய்வாராக. என் பிள்ளைகள் எப்பொழுதும் சந்தோஷமாய் இருக்க வேண்டுமென்று ஆண்டவர் விரும்புகிறார். ஆகையினால் தான் அவர், “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்கு கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” (யோவான் 14:27) என்று கூறுகிறார். என் பிள்ளைகள் சமாதானத்தோடு இருக்க வேண்டுமென்றுதான், ஒவ்வொரு முறையும் அவர் தமது சீஷர்களைப்பார்த்து “உங்களுக்கு சமாதானம்” என்று கூறினார். இந்த நாளிலும் , உங்கள் வாழ்வில் எல்லாம் சமாதானமும் சம்பூரணமாய் இருப்பதாக. நீங்கள் சந்தோஷத்தை பெற்று நிம்மதியோடு உறங்கும்படி தேவன் உங்களுக்கு கிருபை செய்வாராக. இயேசு உங்களோடுகூட இருக்கிறார். அவருக்கு நன்றி சொல்லுங்கள். 

“இயேசு மலையிலிருந்து இறங்கின போது, திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்.  அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப்பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்” (மத்தேயு 8:1,2). அந்த நாட்களில் குஷ்டரோகியாயிருக்கும், ஜனங்கள் வீட்டை விட்டு தனிமையாக சென்று வசிக்க வேண்டும். குடும்பத்தினரை பிரிந்த வெகுதூரத்திற்கு சென்றுவிட வேண்டும். தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களும் வீட்டார் அனைவரையும் விட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள். மருத்துவமனையில் தனிமையிலிருக்கிறார்கள். சிலர் இறந்துபோனால், குடும்பத்தினர்கூட அவருடைய சரீரத்தை பார்க்கமுடியாத நிலை. அந்த சடலம் எரிக்கப்படுகிறது, புதைக்கப்படுகிறது. பல நாடுகளில் மரித்த திரளான சரீரங்களை ஒரே குழியில் புதைக்கின்றனர். பயங்கரமான காலத்தில் நாம் இருக்கிறோம். குஷ்டரோகியும்  இதுபோன்ற தனிமையான சூழலில் தான் இருந்தார். அதோடுகூட யாதொருவன் அவ்வழியே வந்தால், குஷ்டரோகி அந்த நபரை பார்க்கக்கூடாது. அதற்கு முன்பதாகவே “தீட்டு, தீட்டு, நான் அசுத்தமானவன் என்று சத்தம்போட வேண்டும்” இதுதான் அந்த நாட்களிலுள்ள சட்டம்.
இன்றும்கூட நீங்கள் அப்படிப்பட்ட நிலையில் தவித்துக்கொண்டிருக்கலாம்.  உங்கள் உள்ளமே நீங்கள் அசுத்தமானவன்(ள்) என்றும்  நான் தள்ளப்பட்டவன், தள்ளப்பட்டவள் என்றும் சொல்லிக்கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட நிலைமையில் தான் அந்த குஷ்டரோகி இயேசுவை தேடிவந்தான். அவன் கதறினபோது, “இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்” (மத்தேயு 8:3). ஒருவரும் அவனைத்தொடக்கூடாது என்கிற சட்டமிருந்த நிலையில், இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டார். இயேசு மனதுருக்கமுள்ள தேவன். உங்கள் பிரச்சினைகளில் ஒருவரும் ஒன்றும் செய்ய முடியாமால் போனாலும், இயேசுவால் அதை மாற்ற முடியும். தமது காயப்பட்ட கரத்தினால் உங்களை தொட்டு ஆசீர்வதிக்க முடியும். இன்றும்கூட தேவனே, என்னை இரட்சியும் என்று கூப்பிடுங்கள். உங்கள் பாவம், சாபம், இல்லாமை நீங்கி நீங்கள் பூரணமான ஆசீர்வாதத்தை பெறுவீர்கள். 
Prayer:
அன்பின் ஆண்டவரே,

 இந்த வார்த்தைகளை என் வாழ்வில் உறுதிப்படுத்தியருளும். நான் சுத்தமாக்கப்பட்டு சம்பூரண ஆசீர்வாதத்தை அனுபவிக்க இரக்கம் காட்டும். உமது கரத்தை எங்கள்மீது வைத்தருளும். என்னை சுத்திகரித்து சுகமாக்கும். விடுதலை தாரும். சமுதாயத்தில் நான் தொடர்ந்து குடும்பத்துடன் நலமாய் வாழ அருள்புரியும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000