Loading...
Stella dhinakaran

கிறிஸ்துவில் நிலைத்திருங்கள்!

Sis. Stella Dhinakaran
15 Dec
பரிசுத்த பவுல் எபேசியர் சபையிலுள்ள தீமோத்தேயுவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். தேவன் என்றென்றும் நம்மோடுகூட இருக்கிறார் என்பதையும், கடினமான சூழ்நிலைகளிலும் நாம் கர்த்தருக்குள் நிலைத்திருக்க வேண்டுமென்பதையும் ஜனங்களுக்கு அறிவுரை கூறி அவர்களை உற்சாகப்படுத்துகின்றார். நாம் தேவனுடைய கட்டளைப்படி நடப்போமானால், அவர் நம்மோடுகூடவே இருப்பார். “அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்” (1 யோவான் 4:13). 

இத்தகைய தெய்வீகம் நிறைந்த வாழ்வு, கிறிஸ்தவ வாழ்வில் மிகவும் மேலானது. இயேசு தன்னைக் குறித்து “நானும், பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” (யோவான் 4:13). என்கிறார். நீங்களும் அவரைப்போலவே, கொடியானது ஒரு செடியில் பின்னிப்பிணைந்து இணைந்திருப்பது போல, கர்த்தரோடு இணைந்திருக்க வேண்டும் (யோவான் 15:5). இந்த தெய்வீக வாழ்வின் மேன்மையை அறிந்து அதை அனுபவிக்கிறீர்களா? “கர்த்தரோடிசைந்திருக்கிறவன் அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்” (1 கொரிந்தியர் 6:17). எனவே, “கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருக்கிறாரா?” (கொலோசெயர் 1:27) என்பதை சற்று அவர் பாதத்தில் அமர்ந்து சிந்தித்துப்பாருங்கள்!

என்னுடைய வாழ்க்கையின் ஆரம்பம் மிகவும் அற்பமானது! என் தாயார், இளம் வயதாக  இருந்தபொழுது, என்னைக் குறித்து வசைமாரிப் பொழிவார்கள். ஆனால், அப்படிப்பட்ட குறைவுகள் நிறைந்த என்னை கர்த்தர் மாற்றியமைக்கும்படிக்கு தமது அன்பினால் தேடி வந்தார். என் ஆவிக்குரிய கண்களைத் திறந்தார். என் வாழ்வில் இருள் மாறி, கிறிஸ்துவின் ஒளி என்னை பிரகாசிக்க செய்தது (2 கொரிந்தியர் 4:6). கர்த்தர் எனக்குள்ளே வந்து வாசம்பண்ணி, எனக்குள் உலாவினார். நான் அவருடைய குமாரத்தியாக மாறினேன் (2 கொரிந்தியர் 6:16,18) என் புதிய வாழ்வைக் கண்ட என் தாயார் என்னைக் குறித்து மிகவும் பெருமைப்படுவார்கள். அதன்பிறகு தெய்வ பக்தி நிறைந்த என் கணவருடைய வாழ்வை கவனித்து, வேதம் வாசித்து ஜெபிக்க ஆரம்பித்ததின் விளைவாக, பரிசுத்த ஆவியானவர் எனக்குள் இறங்கினபடியால், கர்த்தர் என்னிலும், நான் அவரிலும் நிலைத்திருந்து வாழும்படியான தெய்வீக சிலாக்கியத்தையும், என் கணவரோடு சேர்ந்து கர்த்தருக்கென்று உழைக்கும் பேரின்ப பாக்கியம் நிறைந்த வாழ்வையும் பெற்றேன். இன்றைக்கு என் வயதான காலத்திலும்கூட கர்த்தர் என்னோடும், நான் அவரோடும் நிலைத்திருக்கும் தெய்வீக வாழ்வினிமித்தம் மகிழ்ந்து களிகூருகிறேன்.
அன்பானவர்களே! இதை வாசிக்கிற நீங்கள் ஒவ்வொருவரும்கூட கர்த்தருக்கென்றே உங்களை அர்ப்பணித்து, குறைவுகள் நிறைந்த உங்கள் வாழ்க்கை முற்றிலும் மாறவும், நீங்கள் கர்த்தருக்குள்ளும், அவர் உங்களுக்குள்ளும் இணைந்து வாழ்கிற பாக்கியமான வாழ்வைப்பெற்று, அவருக்கென்று முற்றிலுமாக உங்களை அர்ப்பணித்து வாழ, இன்றே பயப்பக்தியுடன் ஒப்புக்கொடுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
Prayer:
ஆண்டவரே!

உம்மோடு இணைந்து, உமக்கு பிரியமாய் வாழ்ந்து, உமக்குள் நிலைத்து வாழ்ந்திருக்கும் மேன்மையான வாழ்வை எனக்கும் தாரும். நான் அப்படியே என்னை உம் பாதத்தில் அர்ப்பணிக்கிறேன். சிலுவையில் சிந்திய பரிசுத்த இரத்தத்ததால் என்னைக் கழுவி, சுத்திகரித்து, உம்மோடு நிலைத்திருக்கும் கிருபையை எப்பொழுதும் பெற்று வாழ, உம் தூய ஆவியால் என்னை நிரப்பியருள வேண்டும் என்று தாழ்மையோடு வேண்டிக்கொள்ளுகிறேன் நல்ல பிதாவே!

ஆமென்.

1800 425 7755 / 044-33 999 000