Loading...
Paul Dhinakaran

நற்கிரியை தரும் நன்மை!

Dr. Paul Dhinakaran
01 Jan
பிரியமானவர்களே, அன்பின் புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆண்டவரின் அளவற்ற கிருபையால்  இந்த புத்தாண்டு 2020 நன்மையான தொடக்கங்களின் ஆண்டாக இருக்கும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை கேட்கும்படி அவருடைய பாதத்தில் அமர்ந்திருந்த மரியாளைக் குறித்து, இயேசு கிறிஸ்து: மரியாள் தன்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கை தெரிந்துகொண்டாள்  (லூக்கா 10:42) என்று கூறுகிறார். மரியாள் நல்ல பங்கை தெரிந்துகொண்டதுபோல,  நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள். நல்ல தெரிந்துகொள்ளுதல், மகிமையான தொடக்கங்களை குறிக்கும். இன்றைக்கு உங்களுடைய தெரிந்துகொள்ளுதல் எப்படிப்பட்டது? இந்த புத்தாண்டில் மரியாளைப்போன்று தேவனுடைய பாதத்தில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுங்கள்.  அப்பொழுது உங்கள் வாழ்வில் அவர் தரும் நன்மை பெருகுவதை காண்பீர்கள். தேவனோடு நெருங்கி வாழும்படி ஒரு அடி முன்னெடுத்து வைத்திடுங்கள். “உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்” (யோபு 8:7) என்று வேதம் கூறுகிறது. ஒரு அமைதியான இடத்தை தேர்வு செய்து ஒவ்வொரு நாளும் வேதத்தை வாசித்து தியானியுங்கள். உங்கள் சத்துருவை ஆசீர்வதியுங்கள்.  உங்களிடத்தில் காணப்படுகிற எதிர்மறையான குணங்களை அடையாளம் கண்டு, அவற்றைக் கடந்துவருவதற்கு பெலன் அளிக்கும்படி தேவனிடத்தில் மன்றாடுங்கள். “நீதிமானுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்” (நீதிமொழிகள் 4: 18) என்ற வேதவார்த்தையின்படி, நீங்களும் ஒவ்வொரு நாளும் அதிகமாக பிரகாசியுங்கள். ஒரு காத்தாடி சரம் எவ்வாறு ஒரு பாலமாக மாறியது என்பதை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள். 

15 வயது நிறைந்த அமெரிக்கரான ஹோமன் வால்ஷ் நயாகரா நீர்வீழ்ச்சியின் பள்ளத்தாக்கில் பாலம் கட்டும் முதல் படியை மேற்கொண்டார். 1848ம் ஆண்டு, ஜனவரி 30ல் ஹோமன் ஒரு காத்தாடியைப் பறக்கவிட்டார். அதற்கு அவர் “யூனியன்” என்று பெயரிட்டார். எதிர் பக்கத்தில் இருந்த ஒருவர் காத்தாடியைப் பிடித்துகொண்டார், ஹோமன் ஒரு வலுவான சரத்தை காத்தாடியின் முனையில் கட்டினார். மேலும், ஹோமன் புதிய மற்றும் அடர்த்தியான சரத்தை பள்ளத்தாக்கின் குறுக்கே இழுத்து கட்டினார். இந்த சிந்தனை தான் ஒரு வலுவான சரத்தை தயாரிக்கும் செயல்முறையை தொடக்கி வைத்தது. ஒரு மெல்லிய கயிறு, ஒரு வலுவான கயிறு, ஒரு தண்டு, இறுதியாக ஸ்டீல் கேபிள் ஆகியவைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த விரிவாக்கம், தொழிலாளர்கள் கடந்து செல்லவும், அவர்கள் தங்கள் பொருட்களையும், கருவிகளையும் கொண்டு செல்லுமளவு வலுவுள்ளதாயிருந்தது. இறுதியாக, ரயில்களும், லாரிகளும் எளிதில் கடந்து செல்லக்கூடிய ஒரு வலுவான பாலமாக அந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இது ஒரு சரத்தின் மூலமே தொடங்கியது. 
“அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது” (சகரியா 4:10). உங்களிடத்திலுள்ள அற்பமான தொடக்கங்களை கண்டு மனம் சோர்ந்து போகாதிருங்கள். அதை ஆண்டவரிடத்தில் அர்ப்பணியுங்கள். அவர் அதை பெருகச்செய்வார். மண்ணில் விதைக்கப்பட்ட ஒரு விதை பலருக்கு நிழல் தரும் ஒரு பெரிய மரமாக வளர்கிறது. பிரியமானவர்களே, உங்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும் செய்யக்கூடிய விஷயங்களைத் திட்டமிடுங்கள். தேவனுடைய கிருபையையும் ஞானத்தையும் சார்ந்து கொள்ளுங்கள். சர்வ வல்லமையுள்ள தேவனிடத்தில் நீங்கள் ஏறெடுக்கிற ஒரு சிறிய பிரார்த்தனை உங்கள் இருதயத்திற்கு மிகுந்த சமாதானத்தைக் கொண்டுவரும். இந்த ஆண்டில் நீங்கள் விதைக்கின்ற எல்லாற்றிலும் ஒரு பெரிய அறுவடையை காண்பீர்கள். தேவ சமூகத்தில் அமர்ந்து அவரிடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள். தேவன் உங்களோடு பேசுவதை கவனமாக கேளுங்கள். அவர் உங்களை செழிக்கச்செய்வார். இந்த புத்தாண்டில் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்கு உங்களை ஒப்புக்கொடுங்கள். இந்த ஆண்டு நிச்சயமாக உங்கள் வாழ்வில் ஒரு நன்மையான தொடக்கத்தின் ஆண்டாக அமையும்.
Prayer:
அன்பின் தகப்பனே,

இந்த புத்தாண்டில் உம்மிடத்தில் என்னை தாழ்த்தி அர்ப்பணிக்கிறேன். என்னுடைய சுய பெலத்தையோ, ஞானத்தையோ சார்ந்துகொள்ளாதிருக்க உதவிச்செய்தருளும். உம்முடைய அன்பும் இரக்கமும் என் சிந்தையை புதுப்பிக்கட்டும். உம்மோடு நெருங்கி வாழ்கிற வாழ்க்கை எனக்குத் தந்தருளும். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் எப்பொழுதும் என்னை வழிநடத்துவார். தவறான வழிகளை தெரிந்துகொள்ளாதபடிக்கு என்னை காத்தருளும். என்னிடத்திலுள்ள அற்பமானவைகளையும் உம்க்கென்று கொடுக்கிற இருதயத்தை எனக்கு தந்தருளும். அதன்மூலம் கர்த்தர் பெரிய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள உதவிச்செய்வீர் என்று நான் நம்புகிறேன். உமது அன்பினாலும் சமாதானத்தினாலும் எங்களை நிரப்பும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000