Loading...
Dr. Paul Dhinakaran

தேவபயமுள்ளவர் சிறந்து விளங்குவர்!

Dr. Paul Dhinakaran
24 May
இன்றைக்கு என் அன்பு தாயார் சகோதரி. ஸ்டெல்லா தினகரனின் பிறந்த நாள். அன்பு தாயாரை எனக்கு அளித்த தேவாதி தேவனை நான் நன்றியோடு துதிக்கிறேன். 

சிறந்த முன்மாதிரி: என் தாயாரின் வாழ்க்கை பயணத்தில், அவர்கள் ஒவ்வொரு காரியத்திலும் நீதியும் உண்மையும் நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாங்கள் அறியும்படி செய்ததில், அவர்கள் எனக்கு ஒரு சிறந்த முன் உதாரணம். அவர்கள் எதை பிரசங்கித்தார்களோ, அதையே வாழ்ந்தும் காட்டினார்கள். உண்மையாகவே அவர்களுடைய வாழ்க்கையின் மூலம், என் வாழ்க்கையில் தேவபயத்தை கற்றுக்கொடுத்தார்கள். தேவனுக்கு முன்பாக நாம் செய்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் நாம் பதிலளிக்க வேண்டும் என்பதை அடிக்கடி என்னிடம் கூறுவார்கள். வேத வசனங்களை மனப்பாடம் செய்ய வைத்து, அதற்கேற்ப வாழும்படி என்னை வழிநடத்தினார்கள். மிக நேர்த்தியாய் ஜெபத்துடன் என் வாழ்வை சீர்ப்படுத்தினார்கள். 

இரண்டாவதாக, அவர்கள் ஒரு பொறுப்புள்ள பெண்மணி: குடும்பத்திலுள்ள அனைவருக்கும் செய்யவேண்டிய கடமைகளை கவனமாக நிறைவேற்றியிருக்கிறார்கள். என் தந்தை நோய்வாய்ப்பட்டு மிகவும் சோர்வடைந்த நேரத்திலெல்லாம், என் தாயாருடைய ஆறுதலும், பிரார்த்தனையும் என் தந்தையை தேற்றியது. நாங்கள் ஏஞ்சலை இழந்தபோது, என் தாயாருடைய நம்பிக்கையளிக்கும் வார்த்தைகள், எனது தகப்பனாரை உற்சாகப்படுத்தி மீண்டும் எழச்செய்தது. எனது தந்தையாரின் நுரையீரல் பழுதடைந்ததினால் அவர் இரத்தவாந்தி எடுத்தபோது, என் தாயாரின் ஊக்கமான ஜெபம் எனது தகப்பனாரை வியாதிப்படுக்கையிலிருந்து உயிர்த்தெழச் செய்தது. காரணமின்றி ஜனங்கள் எங்களை விமர்சித்தபோது, என் தாயாரின் தன்னம்பிக்கையும், ஊக்கமும் ஊழியத்தின் பாதையில் எங்களை உயிரூட்டி எழும்பி நிற்கச்செய்தது. நாங்கள் வறுமையின் பிடியில் இருந்த நாட்களில், முகங்கோணாமல் மற்ற தேவபிள்ளைகளையும் அவர்கள் நிறைவாய் போஷித்தார்கள். நான் தேவனுடைய பாதையிலிருந்து விலகி நடந்தபோது, என் இரட்சிப்புக்காக ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் உபவாசித்து ஜெபிப்பார்கள். நான் இரட்சிக்கப்பட்ட பின்பும், இன்றுவரை எனக்காகவும், என் குடும்பத்தினருக்காகவும் தொடர்ந்து அந்த ஜெபத்தை ஏறெடுத்து வருகிறார்கள். அதினிமித்தமே நாங்கள் தேவனோடும், தேவனுடைய வார்த்தையின்படியும் நடக்கிறோம். 

மூன்றாவதாக, அவர்கள் ஒரு தேவ பெண்மணி: என் தாயார் எனக்கும், மறைந்த என் தங்கை ஏஞ்சலுக்கும், என் பிள்ளைகளுக்கும் தேவனுடைய வார்த்தையை கவனமாய் கற்பித்தார்கள். எங்களுக்கு மாத்திரமல்ல எல்லா ஜனங்களுக்கும் நற்செய்தியை பிரசங்கிக்கிறார்கள். அவர்கள் தொடங்கிய எஸ்தர் ஜெபக்குழு, JEPG, YEPG, CEPG மற்றும் அவர்கள் எழுதிய புத்தகங்களின் மூலம் கோடிக்கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சி, ஒற்றுமை, சமாதானம், பெற்று சந்தோஷமாய் வாழ்கின்றனர். தேவராஜ்ஜியத்திற்காக ஜெப வீரர்களின் குழுக்களை வைராக்கியத்துடன் வளர்த்திருக்கிறார்கள். அவர்களுடைய பலவீனங்களின் மத்தியில் அதிக பெலனோடு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். 
என் விலையறேப்பெற்ற நண்பரே, ஒருவேளை உங்கள் வீட்டில், உங்கள் பிள்ளைகள் தெய்வீக வழிகளை விட்டு விலகி சென்றிருக்கலாம். அவர்களுக்காக தேவனிடத்தில் மன்றாடுங்கள். சுகவீனமாய் இருக்கிற அன்புக்குரியோருக்காக நீங்கள் ஜெபிக்கிற விசுவாச ஜெபம் அவர்களை உற்சாகப்படுத்தி வியாதிப்படுக்கையிலிருந்து எழுப்பும்.  ஆறுதலின் தேவனைப்பற்றிக்கொள்ளுங்கள். அவரே  உங்களை இழப்புகளின் மத்தயில் ஆறுதல்படுத்துகிறவர். தேவனுக்காக வைராக்கியமாய் ஓடுகிற என் தாயாரைப்போன்று தேவன் உங்களையும் பெலப்படுத்துவார். உங்கள் சூழ்நிலை எப்படியிருந்தாலும், கர்த்தரை பற்றிக்கொண்டு, அவருக்கு நன்றி செலுத்துங்கள். எங்கள் குடும்பத்திற்கு என் தாயாரை ஆசீர்வாதமாய் கொடுத்த தேவன், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார். 
Prayer:
பரலோகப் பிதாவே,

உமது பார்வைக்குப் பிரியமான வாழ்க்கையை வாழ எனக்கு உதவும். என் அன்புக்குரியவர்கள் உம்மை அறிந்துகொள்ளும்படி ஜெபிக்கிறேன். மேற்கண்ட சாட்சியின் மூலம் என் தாயாரின் வாழ்வில் நீர் எவ்வளவு விலையேறப்பெற்றவர் என்பதை இவர்கள் அறிந்து, உம்மை பற்றிக்கொள்ளட்டும். நோய்வாய்ப்பட்ட நிலையிலிருக்கிற எனக்கு அன்பானோரை நீர் சுகமாக்கும். என் குடும்பத்திற்கும், என்னை சுற்றியுள்ளவர்களுக்கும் என்னை ஆசீர்வாதமாக்கும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000