Loading...
Stella dhinakaran

கனத்திற்குரிய பாத்திரம்!

Sis. Stella Dhinakaran
17 Oct
 “ஒருவன்...தன்னை சுத்திகரித்துக்கொண்டால் அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும்....எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்” (2 தீமோத்தேயு 2:21).
அன்பானவர்களே, ஆண்டவர் உங்களை கனத்திற்குரிய பாத்திரமாக வனைய விரும்புகிறார். நீங்கள் இன்று எப்படிப்பட்ட பாத்திரமாக இருக்க விரும்புகிறீர்கள்? மேலே கூறப்பட்டுள்ளபடி “கனத்திற்குரிய பாத்திரமா?” அல்லது “கனவீனத்திற்குரிய வெறுமையான பாத்திரமா?” கர்த்தர் விரும்பாத எல்லாவித தீமையான வழிகளையும் வெறுத்து, அவைகளை விட்டுவிலகி, அவருடைய பரிசுத்த இரத்தத்தால் கழுவி சுத்திகரிக்கப்பட்டவர்களாக, நற்கிரியை, நற்பண்புகள், நற்சாட்சி நிறைந்த வாழ்வைப் பெற உங்களை அர்ப்பணியுங்கள். அப்பொழுது கர்த்தர் தமது பிரியமான கனத்துக்குரிய பாத்திரமாக உங்களை மாற்றுவார்.
ஒரு வாலிபன் தன் நண்பர்களுடன் சேர்ந்து உல்லாசமாக வாழ்ந்து, இந்த உலக வாழ்வை அனுபவிக்க எண்ணினான். நாளுக்குநாள் அவனையுமறியாமல் பாவத்தின் ஆழத்தில் போய்க்கொண்டிருந்தான். இதன் விளைவாக சமாதானம், சந்தோஷம், கர்த்தருடைய பிரசன்னம் யாவையும் இழந்தான். அவனையுமறியாமல் மனதிலே ஒரு சோர்வு ஏற்பட்டது. தனி மனிதனாக செய்வதறியாது தவித்தான். “இனி என் வாழ்வு அவ்வளவுதான்”  என்று மனம்போன திசையில் ஒருநாள் நடந்துகொண்டிருந்தபொழுது, தன் பள்ளி நண்பன் ஒருவனை சந்திக்க நேரிட்டது. அவன்தான் இவனை அடையாளம் கண்டுகொண்டு, தன் வீட்டிற்கு அழைத்து சென்றான். இவனுடைய பரிதாபமான நிலையை ஒரு வழியாய் உணர்ந்துகொண்ட அவன் நண்பன், அவனை உற்சாகப்படுத்தி, தீய வழிகளுக்கு அவன் செல்வதை நிறுத்தி, அவனோடுகூட சேர்ந்து ஜெபிக்க ஆரம்பித்தான். அப்பொழுது அவன் சற்று தெளிவடைந்து, ஆண்டவருடைய அன்பை ருசிக்க ஆரம்பித்தான். இரட்சிப்பு, அபிஷேகம் யாவையும் பெற்று, கர்த்தருக்குள் மிகுந்த ஆறுதல் பெற்றான். கர்த்தர் அவனை தம் கிருபையினால் நிரப்பி, அநேகரை ஆற்றித் தேற்றும் ஆறுதலின் பாத்திரமாக முற்றிலும் மாற்றினார்.
அருமையானவர்களே! பாவத்தில் விழுந்துபோன நிலையிலிருக்கிறீர்களா? கர்த்தர் உங்களை அன்போடு தம் கரம் நீட்டி அழைக்கிறார். அவருடைய அரவணைப்பிற்குள் வந்துவிடுங்கள். உலகம், மாமிசம், பிசாசு இவை யாவையும் உங்களைவிட்டு அப்புறப்படுத்துங்கள். கர்த்தர் விரும்புகிற பரிசுத்த வாழ்வைப்பெற உங்கள் வாழ்வின் அசுத்தங்கள் எல்லாவற்றையும் உங்களைவிட்டு அகற்றுங்கள். பரிசுத்தத்தை அவர் சிநேகிக்கிறார் (மல்கியா 2:11). “ஆண்டவரே! நானும் உம்மைப்போல் பரிசுத்தமாக நடக்க, பரிசுத்த ஆவியினாலே என்னை நிரப்பும்” என்று அவரிடம் ஒப்படையுங்கள். கர்த்தர் அப்படியே உங்களை தமது பரிசுத்த பாதையில் நடத்துவார். “ஒருவன்...தன்னை சுத்திகரித்துக்கொண்டால் அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்” (2 தீமோத்தேயு 2:21).
Prayer:
ஆண்டவரே!
என் வாழ்விலும் எந்தவித அலட்சியமும் காணப்படாமல், நீர் எனக்காக செய்த தியாகத்தை எண்ணி, நீர் விரும்புகிற பரிசுத்த வாழ்வை வாழ கிருபை தாரும். இவ்விதமான தெய்வீக பாத்திரமாக என் வாழ்வையும் மாற்றும். என்னை முற்றிலும் உம் நாம மகிமைக்கென்று அர்ப்பணிக்கிறேன்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே!
ஆமென்.
 

For Prayer Help (24x7) - 044 45 999 000