Loading...
Evangeline Paul Dhinakaran

புது வாழ்வு துளிர்க்கும்!

Sis. Evangeline Paul Dhinakaran
02 Jan

2020 புத்தாண்டில் நாம் பிரவேசித்துள்ளோம். புதிய தொடக்கங்களின் ஆண்டான இவ்வாண்டில், புது வாழ்க்கை தழைக்கும்; உங்கள் இருதயத்தை தேவனுடைய தோட்டமாக ஆண்டவர் மாற்றுவார் என்று உறுதியாக நம்புகிறேன். நீங்கள் எதனுடனும் போராடாமலேயே எல்லாம் புதிதாகும் . நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஆண்டவருக்கு உங்கள் இருதயத்தை அளிப்பதே! நித்திய சந்தோஷத்தால் அவர் உங்களை செழிப்பான செடியாக வளரச்செய்து, பசுமையான தோட்டமாக மலர்ந்திருக்க அருளுவார். “பலத்தினாலும் அல்ல, பராமக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்” என்று சர்வ வல்ல தேவன் சொல்லுகிறார் (சகரியா 4:6). நீங்கள் ஆண்டவருடைய வார்த்தையிலும், அவரிலும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்புவது உங்களுக்கு கொடுக்கப்படும். 

ஒடிசா மாநிலத்திலுள்ள ஜாம்ஷெட்பூர் நகரில் ஒரு சகோதரி ‘இயேசு அழைக்கிறார்’ கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். “தங்களுடைய குடும்பம் ஆசீர்வதிக்கப்பட வேண்டும்”  என்று அவர்கள் ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். கூட்டத்தின் மூன்றாம் நாள் என் கணவர் னுச. பால் தினகரன் தேவ செய்தியளித்து, ஜனங்களுக்காக ஜெபித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர், “இன்று ஆண்டவர் உங்களுக்கு வேலை அளிக்கிறார். எந்த வேலை அவர் கொடுக்கிறாரோ அதைப் பெற்றுக்கொள்ளுங்கள்.” என்று கூறினார். அந்த சகோதரி ஆண்டவரின் குரலுக்குக் கீழ்ப்படிந்தார்கள். வீட்டிற்கு சென்றதும் கூட்டத்தில் கூறப்பட்டதை தன் கணவரோடு பகிர்ந்துகொண்டார்கள். அவர்கள் கணவர் வேலை இல்லாமல் இருந்தார். அவர்கள் கூறிய வார்த்தையை அவரும் பெற்றுக்கொண்டார். குடும்பமாக அவர்கள் ஆண்டவருடைய வார்த்தையை நம்பினார்கள். கப்பல் நிறுவனம் ஒன்றில் வேலைக்காக அவர் விண்ணப்பித்தார். ஆண்டவர் கூறியபடியே அந்த நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. அவர்கள் தங்கள் குழந்தைகள் இருவரையும் “இயேசு அழைக்கிறார்” இளம் பங்காளர் திட்டத்தில் இணைத்தார்கள். “இயேசு அழைக்கிறார்” தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் அவர்கள் தாங்கியுள்ளார்கள். சொந்தமாக அழகிய வீடு வேண்டுமென்று விரும்பி ஒரு சிறிய நிலத்தை வாங்கினார்கள். அதே நிலத்தில் வீடு கட்டும்படி ஆண்டவர் அருள்புரிந்தார். 

நீங்கள் தேடிக்கொண்டிருப்பவையாகட்டும், உங்கள் காத்திருக்குதலாகட்டும் எல்லாவற்றுக்கும் ஆண்டவர் பதில் தருவார். நீண்டகாலம் காத்திருந்து மனம் சலித்துபோயிருக்கலாம். வாழ்க்கையே வனாந்தரமாக தோன்றலாம். ஆனால், ஆண்டவர் உங்களுக்கு வனாந்தரத்தில் வழியை உண்டுபண்ணுவார். பிரச்னைகளிலிருந்து வெளிவர அவரே வழி உண்டாக்குவார். “இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்” (ஏசாயா 43:19).  இந்த ஆண்டு முழுவதும் அவரே தமது வசனங்கள் மூலம் உங்களோடு பேசுவார். ‘இந்த ஆசீர்வாதம் எனக்கு எப்படி வரும்?’ நீங்கள் ஆச்சரியமாக கேட்கலாம். “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்” (யோவான் 15:7) என்று வேதம் கூறுகிறது. தினந்தோறும் நாம் அவரிலும் அவர் வார்த்தை நம்மிலும் நிலைத்திருக்கும்போது, அனைத்து ஆசீர்வாதமும் தாமாகவே வந்து சேரும். அவை வந்து உங்கள் பாதத்தில் விழும். நம் அன்பு தகப்பன் அப்படிச்செய்வார்.

Prayer:

அன்பு பரமப்பிதாவே,

உமக்குக் கீழ்ப்படியும் இருதயத்தை எனக்குத் தாரும். அதன்மூலம் நான் பசுமையான தோட்டத்தைப்போல் செழிக்கட்டும். பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல. உமுமடைய ஆவியினாலேயே நான் எல்லாவற்றையும் செய்ய முடியும். நான் என்ன செய்யவேண்டும் என்று தினந்தோறும் எனக்குப் போதித்தருளும். என்னுடைய பிரார்த்தனைகளுக்கு நீர் பதில் தருவீர் என்று நம்புகிறேன். 

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000