Loading...
Dr. Paul Dhinakaran

தெய்வீக மாறுதல்

Dr. Paul Dhinakaran
15 Oct
“மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” (மத்தேயு 4:4).
பிரியமானவர்களே! சகேயு என்ற மனிதன் வரி வசூலிப்பவன். இயேசு அன்புள்ளவர், சுகமளிப்பவர், இரட்சகர் என்பதை அறிந்திருந்தான். எனவே, இயேசு எரிகோ வழியே கடந்து போகிறார் என்று கேள்விப்பட்டு, அவரைப் பார்க்க ஆவலோடு ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். இயேசு அவனைப் பார்த்து, “சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கி வா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும்” (லூக்கா 19:5) என்று கூறினார். எல்லோரும் அவனை பாவி என்று வெறுத்தனர். ஆனால் இயேசுவோ, அவன் பெயரைச் சொல்லி அழைத்தார். இயேசுவின் அன்பினால், அவனது உள்ளம் உருகி, புது சிருஷ்டியானான். அவனது வாழ்க்கை மாறியது. உடனே அவன், தனது ஆஸ்தியில் பாதியை ஏழைகளுக்கும், யாரிடமாவது அநியாயமாக வாங்கியிருந்தால், அவற்றை நாலத்தனையாகவும் திருப்பிக் கொடுப்பதாக வாக்களித்தான். “சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: “ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதிகளை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன்” என்றான் (லூக்கா 19:8). உடனடியாகவே எவ்வளவு பெரிய மாற்றம்!
இயேசுவின் வார்த்தைகள் ஜீவனையும், இரட்சிப்பையும் மனமாற்றத்தையும் கொண்டுவருகிறது. இயேசு, "நான் ஜீவனுள்ள வசனங்களை (வார்த்தைகளை) பேசுகிறேன்” என்று சொன்னார்.  தேவனுடைய ஒரேயொரு வார்த்தை, அநியாயமாய் வரிவசூலித்து பாவத்தில் வாழ்ந்த ஒரு மனிதனுக்கு மனமாற்றத்தை கொண்டுவந்தது.  ஆம் தேவனுடைய வார்த்தைகள் உங்களையும் உயிர்ப்பிக்க வல்லமையுள்ளதாய் இருக்கிறது. ஆண்டவர் நிச்சயமாக இன்று உங்களை இரட்சிப்பார். இந்த உலகத்திலிருந்து வருகிற வார்த்தைகள் வேதனையையும் கண்ணீரையுமே கொண்டுவரும். ஆனால், ஆண்டவரிடத்திலிருந்து வருகிற வார்த்தைகள் உங்களை உயிர்ப்பித்து வாழச் செய்யும். இன்று உங்கள் வாழ்க்கையை தேவனுக்கு அர்ப்பணியுங்கள். அவர் உங்களை உயிர்ப்பிப்பார். நீங்கள் படிப்பில் / வேலையில் / வியாபாரத்தில் / வாழ்க்கையில் தோல்வியடைந்ததாக நினைத்து வருத்தப்படலாம். நான் மரித்தவனைப் போலானேன் என்று சொல்லலாம். இல்லை பிரியமானவர்களே, இன்று இயேசு உங்களைப் பார்த்து உயிர்ப்பிக்கிற வார்த்தைகளைக் கூறுவார். நீங்கள் ஜீவனைப் பெற்றுக்கொள்வீர்கள். நீங்கள் சுகமாக வாழ்வீர்கள்.
பிரியமானவர்களே, தேவனுடைய வார்த்தைகள் உங்களுக்குள் வரும்போதுதான், உங்களுடைய பேச்சு மாறும். உங்கள் பேச்சு மாறும்போது, உங்களை சுற்றியுள்ள உலகமும் மாறும். இயேசு சகேயுவை அலட்சியப்படுத்தாமல் மதித்து பேசினார். இயேசுவின் வார்த்தைகளிலுள்ள அன்பும், தூய்மையும் உடனடியாக அவனது பாவத்தை உணர்த்தின. “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” (மத்தேயு 4:4). ஆகவே, தேவனுடைய வார்த்தையால் நிறைந்து இந்த நாளுக்குள் பிரவேசியுங்கள். உங்களது வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் மற்றவர்களுடைய வாழ்க்கையில் ஒரு தெய்வீக மாறுதலை கொண்டுவரும்.
Prayer:
அன்பின் பரலோக தகப்பனே, நான் பேசும் வார்த்தைகளில் வல்லமை இருப்பதை நம்புகிறேன். இன்றைக்கு நான் மற்றவர்களை சுத்திகரிக்கிற, உருவாக்குகிற, உற்சாகமூட்டுகிற வார்த்தைகளையே பேச உதவி செய்யும். என்னுடைய நாவு, பிறரின் வாழ்க்கையில் இரட்சிப்பையும், பரிசுத்தத்தையும் கொண்டுவருவதாக.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

 

For Prayer Help (24x7) - 044 45 999 000