Loading...
Evangeline Paul Dhinakaran

பொறுமையுடன் காத்திருங்கள்!

Sis. Evangeline Paul Dhinakaran
16 Apr
பிரியமானவர்களே, சில தேவைகளுக்காக நாம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். விரும்பி கேட்கிற காரியம் உடனடியாக கிடைக்காமற்போனால், அநேகர் சோர்ந்துபோய்விடுகிறார்கள். சிலர், “அவ்வளவுதான் நம் வாழ்க்கை” என்று தங்களை தாங்களே மாய்த்துக்கொள்ளுகிறார்கள். காத்திருப்பது மிகவும் கடினமான காரியம்தான். அப்படி காத்திருக்கும்போது ஆண்டவர் நமக்கு பொறுமையைக் கொடுக்கிறார். 

நாம் ஆண்டவருடைய பாதத்தில் சாப்பிடாமல் தூங்காமல் காத்திருந்து ஜெபித்துக்கொண்டேயிருப்போம். அப்படிப்பட்ட நேரத்தில், தமது பிரசன்னத்தை அனுபவித்து பரிசுத்தமாக வாழும்படியாக ஆண்டவர் கிருபை செய்கிறார். ஆண்டவர் இயேசுவை முகமுகமாய் பார்க்கவேண்டும். அவரிடத்திலிருந்து நான் பதிலை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று அநேகர் ‘இயேசு அழைக்கிறார்’ ஜெபகோபுரங்களுக்கு வருகிறார்கள். விசுவாசத்தோடு வரும் அவர்கள் விரும்பி வேண்டி கேட்டுக்கொள்வதை அவர் அருளிச்செய்கிறார். 
“எங்கே இரண்டு பேராவது, மூன்று பேராவது என் நாமத்தினாலே கூடியிருக்கிறார்களோ அங்கே நான் அவர்கள் நடுவே இருப்பேன்” (மத்தேயு 18:20) என்று சொன்ன தேவன், ஜெபகோபுரங்களில் நடைபெறும் ஆசீர்வாதக் கூட்டங்களில், ஒருமனப்பட்டு ஏறெடுக்கப்படும் பிரார்த்தனைகளை கேட்கிறார். ஆம், உங்கள் ஜெபத்திற்கும் அவர் பதில் தருவார். ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் நாம் ஜெபிக்கும்போது, அவர் நிச்சயமாக அற்புதத்தை செய்வார். ஆகவே, சோர்ந்துபோகாதீர்கள்! தேவன் அதினதின் காலத்திலே எல்லாவற்றையும் நேர்த்தியாய் செய்து முடிப்பார் (பிரசங்கி 3:11).

“இயேசு தீருசீதோன் பட்டணங்களின் எல்லைகளை விட்டு புறப்பட்டு, தெக்கப்போலியின் எல்லைகளின் வழியாய்க் கலிலேயாக் கடலருகே வந்தார். அங்கே கொன்னைவாயுடைய ஒரு செவிடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவர் தமது கையை அவன்மேல் வைக்கும்படி வேண்டிக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவனை ஜனக்கூட்டத்தை விட்டுத் தனியே அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய விரல்களை அவன் காதுகளில் வைத்து, உமிழ்ந்து அவனுடைய நாவைத் தொட்டு; வானத்தை அண்ணாந்துபார்த்து, பெருமூச்சுவிட்டு: எப்பத்தா என்றார்; அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தமாம். உடனே அவனுடைய செவிகள் திறக்கப்பட்டு, அவனுடைய நாவின் கட்டும் அவிழ்ந்து, அவன் செவ்வையாய்ப் பேசினான் (மாற்கு 7:31-35).

வேதத்தில் குறிப்பிடப்பட்ட இந்த செவிடனுடைய செவி திறக்கும்படியாக அநேக ஆண்டுகள் அவன் காத்திருந்தான். ஏற்ற வேளையிலே தேவன் அவன் வாழ்க்கையில் அற்புதம் செய்தார். அதுபோலவே அவர் உங்கள் வாழ்க்கையிலும் செய்வார். ஆம், உங்கள் ஜெபத்தை கேட்டு, உங்களை நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போல மாற்றுவார் (ஏசாயா 58:11).
Prayer:
அன்பின் தேவனே,

நான் உம்மிடத்தில் கேட்டுக்கொண்டவைகளை பெற்றுக்கொள்ளும்படியாக பொறுமையுடன் காத்திருக்கிறேன். என் பொறுமைக்கான பலனை நான் சீக்கிரம் பெற்றுக்கொள்ள கிருபை செய்தருளும். உம்மையே நான் நம்பியிருக்கிறேன்.  என் நம்பிக்கை ஒருநாளும் என்னை வெட்கப்படுத்தாது என்பதை அறிந்திருக்கிறேன். என் நம்பிக்கையின்படியே என்னை ஆசீர்வதியும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
ஆமென்.

1800 425 7755 / 044-33 999 000