Loading...
Stella dhinakaran

இரட்சிப்பின் மேன்மை!

Sis. Stella Dhinakaran
17 Apr
அன்பானவர்களே, ஆபிரகாமை தேவன் தம் சித்தப்படியே அழைத்து, நீதியின் வழிகளிலே நடத்தி, சந்ததி சந்ததியாக ஒளியின் பாதையிலும், செம்மையான இருதயத்துடன் நடக்கவும் வழிநடத்தினார் என்று வேதபுத்தகத்திலே வாசிக்கிறோம். இன்று நம்மையும் அதேவண்ணமாக அழைக்கிற தேவனுடைய சித்தத்தினை அறிந்து, நீதியின் பாதையையே பயபக்தியுடன் தெரிந்துகொள்வோம். அப்பொழுது, நம் வாழ்விலே கர்த்தர் வெளிச்சயமாக சமாதானம், சந்தோஷம் யாவையும் சம்பூரணமாய் அருளுவார்.“நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது” (சங்கீதம் 97:11).

ராணுவ சேவைபுரிந்து, ஓய்வுபெற்று வீடு திரும்பிய குடும்பத் தலைவர் ஒருவர், புகைப்பிடிப்பது போன்ற பல்வேறு கேடான வழிகளுக்கு அடிமையாயிருந்தார். ஆண்டவருடைய இரட்சிப்பின் மேன்மையை அறியாமல், பெயரளவில் கிறிஸ்தவராயிருந்தார். ஒரு சமயம், அவர் இருந்த ஊருக்கு வந்த ஒரு தேவ மனிதரின் செய்திகள் மூலம், “இரட்சிப்பின் மேன்மையை” அறிந்து, கர்த்தருடைய அழைப்பிற்கு தன் வாழ்வை அர்ப்பணித்து, புது மனிதனாக நீதியின் வழிகளில் நடந்தார். அதினால் அவருடைய உறவினர்கள், உடன் பணிபுரிந்தவர்கள் யாவரும் அவருடைய பக்தியைக் குறித்து பரிகசித்தனர். எனினும், கர்த்தர் அவருடைய பக்தி வைராக்கியத்தையும், அவர் வெளிச்சத்தின் பாதையில் நடப்பதினிமித்தம் அவரை மட்டுமின்றி, அவருடைய சந்ததியையும் இருளின் வழிகளிலிருந்து விடுவித்து, வெளிச்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வை அவர்கள் பெறவும், நற்சாட்சிகளாக விளங்கவும் தேவன் அற்புதமாக கிரியை செய்தார். 
பிரியமானவர்களே, “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (1 யோவான் 1:9). இந்த தெய்வீக பாக்கியத்தை நீங்களும் சந்ததி சந்ததியாக பெற்று மகிழ, இன்றைக்கு உங்கள்  வாழ்க்கையை  பயபக்தியுடன் தேவனுக்கு அர்ப்பணியுங்கள். உங்கள் குறைவுகள் யாவையும் அவரிடத்தில் அறிக்கை செய்யுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை மிகவும் நேசிக்கிறார். அவர் உங்கள்மீது வைத்த அன்பினிமித்தம் உங்களை இரட்சித்து மேன்மைப்படுத்துவார். உங்கள் மூலம் அநேகர் இரட்சிக்கப்படும்படி அவர் உங்களை உபயோகப்படுத்துவார். 
Prayer:
என் அன்பு இரட்சகரே! 

இன்றைக்கு  உம்முடைய சமூகத்தில் என் குறைவுகள் யாவையும் நான் அறிக்கை செய்கிறேன். என் பாவத்தை மன்னித்தருளும். இத்தகைய மேலான மகிழ்ச்சி நிறைந்த இரட்சிப்பின் வழியை பின்பற்றி   சந்ததி சந்ததியாக நற்சாட்சியுடன் வாழவும், நீரே என்னை கரம்பிடித்து வழிநடத்தும். நீர் அப்படி செய்யப்போகிறதற்காக உமக்கு ஸ்தோத்திரம்.

உம்முடைய நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, 

ஆமென்.

1800 425 7755 / 044-33 999 000