Loading...
Stella dhinakaran

மேன்மைப்படுத்தும் தேவன்!

Sis. Stella Dhinakaran
16 Apr
யோசுவா என்ற தேவ மனிதனிடம் கர்த்தர் கூறிய அருமையான வார்த்தை இது, “நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன் என்றார்” (யோசுவா 3:7). 

பிரியமானவர்களே, யோசுவாவின் வாழ்க்கையிலே கர்த்தருக்கு முன்பாக உண்மையும் உத்தமமும் காணப்பட்டது. அவன் மோசேயோடுகூடவேயிருந்து, கர்த்தருக்கு பிரயோஜனமானதை, பயபக்தியோடு நிறைவேற்றி முடித்தான். எனவே, நீதிமொழிகள் 28:20-ல் வாசிக்கிறபடி, பரிபூரண ஆசீர்வாதங்களை கர்த்தரிடத்திலிருந்து அவன் பெற்றுக்கொண்டான். இதேபோன்று, உபாகமம் 28:1-ல், கர்த்தர் தம்முடைய கட்டளைகளின்படி செய்து, அவர் சத்தத்துக்கு உண்மையாய் செவிகொடுக்கிறவர்களை, பூமியின் சகல ஜாதிகளிலும் மேன்மையாக வைப்பார் என்று வாசிக்கிறோம். வேத புத்தகத்தை கவனமாக வாசித்து, அதன்மூலம் கர்த்தருடைய கட்டளைகள் இன்னதென்று அறிந்துகொள்வது  மிகவும் அவசியமான     காரியமாகும். நாம் ஒவ்வொருவரும் இதை அனுதினமும் கடைபிடிக்க வேண்டுமென்பது தேவனுடைய திருவுள சித்தமாயிருக்கிறது. அதேபோன்று அவருடைய வழிநடத்துதலுக்குக் காத்திருந்து, அதன்படி நடக்கும்பொழுது, கர்த்தர் நம்மிலே பிரியமாயிருந்து சகல ஜாதிகளிலும் நம்மை மேன்மைப்படுத்துவார் என்பதை நாம் அனுபவித்து அறிந்துகொள்ள வேண்டும். 

கிறிஸ்துவுக்கு மிகவும் பிரியமான வாலிபன் ஒருவன், தன்னுடைய வேலையிலும் உண்மையும், உத்தமமுமாய் இருந்தான். கிறிஸ்துவினுடைய குணாதிசயங்கள் அவனில் காணப்பட்டன. அவன் உண்மையாய் உழைப்பதைக் கண்ட அவனுடைய தலைமை குமாஸ்தா, எப்பொழுதும் அவன்மீது சீறிப்பாய்ந்தவராய், காரணமில்லாமல், அவனை வேதனைக்குள்ளாக்கிக் கொண்டேயிருந்தார். அந்த அலுவலக வேலையில் உயர் பதவிகளுக்கான தேர்வுகளை எழுதி தேர்ச்சிபெற்று, வெகுசீக்கிரத்தில், அந்த வாலிபன் இளம் வயதிலேயே உயர் அதிகாரி ஆகும் பாக்கியம் பெற்றான். ஆனால், அவனுக்கு எதிராக எழும்பி நின்ற தலைமை குமாஸ்தாவோ, இருக்கிற இடம் தெரியாமல் மறைந்துபோனார்.
ஆம், பிரியமானவர்களே, மேன்மைக்கு முன்னானது தாழ்மை (நீதிமொழிகள் 15:33). ஆகவே, கர்த்தருக்கு பயந்து, அவருக்கு முன்பாக உண்மையும், உத்தமமுமாய் நடந்து, அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து வாழ்வோமானால் நாமும்கூட நிச்சயமாக கர்த்தரிடத்தில் இருந்து, இந்த தெய்வீக மேன்மையைப் பெற்றுக்கொள்வது நிச்சயமான காரியம்.
Prayer:
ஆண்டவரே, உம்மை நம்பியிருக்கிற உம் பிள்ளைகள் ஒவ்வொருவரோடும் நீர் கூடவேயிருந்து, ஆசீர்வாதங்களை ஊற்றுகிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறோம். கர்த்தரால் வரும் மேன்மை எனக்கு கிடைக்கவில்லையே என்று கலங்குகிற மக்கள் ஒவ்வொருவரும், யோசுவாவைப்போல, உமக்கு முன்பாக பயத்தோடும் பக்தியோடும் தாழ்மையோடும், ஜெப சிந்தையோடும் நெருங்கி வாழ்ந்து, அவர் தரும் மேன்மையை பெற்றுக்கொள்ள, நீர்தாமே உம்முடைய கரத்தை அவர்கள்மீது வைத்து ஆசீர்வதிப்பீராக.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

1800 425 7755 / 044-33 999 000