Loading...
Paul Dhinakaran

பெற்றோரை கனம் பண்ணுங்கள்!

Dr. Paul Dhinakaran
17 May
இன்றைய நவீன உலகத்தில், பெற்றோர் கூறுகிற அறிவுரைகளை பிள்ளைகள் ஏற்றுக்கொள்வதில்லை. குடும்பத்தின் அடித்தளமாக இருக்கும் பெற்றோரின் அறிவுரைகளை பிள்ளைகள் புறக்கணிப்பதை நாம் காண்கிறோம். அவர்களிடமிருந்து வருகிற அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளாமல் அவற்றை வெறுக்கிறார்கள். ஆனால் வேதம், பெற்றோரின் புத்திமதியை கேட்க வேண்டுமென்று மிகத் தெளிவாய் நமக்கு போதிக்கிறது, “என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே” (நீதிமொழிகள் 1:8).

இயேசு கிறிஸ்து 30-வது வயதுவரை தம் பெற்றோருடன் இருந்து அவர்களுக்கு உதவியாயிருந்தார். பின்பு தேவனுடைய ஊழியத்திற்குச் சென்றார். அவர் எப்போதும் தம்முடைய பெற்றோரை கனப்படுத்தினார். அவர்களுக்கு கீழ்ப்படிந்தார் (லூக்கா 2:51). இயேசு தாமே நமக்கு முன்மாதிரியாக இருந்தார். நீங்கள் உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து அவர்களின் அறிவுரைகளைக் கேட்டு, நீதியுள்ள வாழ்க்கை வாழ்வதனால், உங்கள் வாழ்க்கை செழிப்பும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையாயிருக்கும். நீங்கள் வெற்றியடையும்போது, உங்கள் பெற்றோரை கவுரவிக்க மறவாதேயுங்கள்.
கைக்கேல் சாங், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் தன்னுடைய பதினேழாவது வயதில் சாம்பியன் ஆனார். அவரை பத்திரிகை நிருபர்கள் பேட்டிக் கண்டபோது, “என் வெற்றிக்கு என் வாழ்க்கையில் என் தகப்பனார்தான் முக்கிய காரணம். நான் பயிற்சிக்கு எங்கு சென்றாலும், அவர் என் கூடவே வருவார். ஞாயிற்றுக்கிழமைகளில், அவர் என்னை ஆலயத்திற்கு அழைத்துச் செல்வது வழக்கம். அவர் எனக்கு இயேசுவைப் பற்றி நன்றாக சொல்லித் தருவார். அவர் என் குறையினை சுட்டிக்காட்டுவார். நான் பயிற்சியாளர் சொல்லும் ஆலோசனையை கேட்பேன். அதேசமயம் என்னுடைய தகப்பனாரின் ஆலோசனையையும் கேட்பேன். அதனால் தான் தேவன் என்னை டென்னிஸ் சாம்பியனாக கவுரவப்படுத்தினார். என் இருதயம் மகிழ்ச்சியால் பொங்கி வழிகிறது” என்று தனது வெற்றியின் ரகசியத்தை அவர் பகிர்ந்துகொண்டார். 

ஆம் பிரியமானவர்களே, நீங்கள் உங்களுடைய பெற்றோருக்கு கீழ்ப்படிந்து அவர்களை மதித்து கனம்பண்ணும்போது, ஆண்டவர் உங்களை ஆசீர்வதித்து நீங்கள் கையிட்டுச் செய்கிற எல்லாவற்றிலும் உங்களை ஆசீர்வதிப்பார். மாறாக நீங்கள் உங்கள் பெற்றோரை மதிக்காமல், அவர்களை அவமதித்து அவர்களுடைய அறிவுரைக்கு செவிசாய்க்காமல் போனால், அவர்களுடைய நிலையைக்குறித்து வேதம் இவ்வாறு கூறுகிறது. “தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோம்” (நீதிமொழிகள் 20:20).

மற்றொரு பக்கம், நீங்கள் உங்கள் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து, அவர்களுடைய அறிவுரையைக் கேட்டு, நீதியுள்ள வாழ்வை நடவுங்கள்.  அப்பொழுது அவர் உங்கள் வழிகளை ஆசீர்வதித்து உங்களை மகிழ்ச்சியினால் நிரப்பி செழிக்கச்செய்வார். “பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம், உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது” (எபேசியர் 6:1-3). இன்றைக்கு, உங்கள் வாழ்வில் நீங்கள் எதை சாதித்திருந்தாலும், அவை யாவும் உங்கள் பெற்றோர் உங்களுக்கு கொடுத்தது. அவர்கள்மீது அன்பு கூருங்கள்; அவர்களுக்கு மதிப்பு கொடுங்கள்; அவர்களுடைய அறிவுரைகளுக்கு கீழ்ப்படியுங்கள்! கீழ்ப்படிதல் அன்பை வெளிப்படுத்தும். இவற்றை நீங்கள் தவறாது கடைப்பிடித்தால், நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். 
Prayer:
என்னை நேசிக்கிற தேவனே, 

தினமும் ஆசீர்வாதமான வார்த்தைகளை நீர் எனக்கு தருவதற்காக நன்றி. என் பெற்றோருக்கு நான் கீழ்ப்படிந்து அவர்களை கனப்படுத்த எனக்கு உதவி செய்யும். நான் அவர்களை ஒருபோதும் வெட்கப்படுத்தவோ, மனதை காயப்படுத்தவோ கூடாது. அவர்களுக்கு கீழ்ப்படிந்து நடக்க அருள் செய்யும்.

இயேசுவின் நாமத்தில் மன்றாடி ஜெபிக்கிறேன், 

ஆமென்.

1800 425 7755 / 044-33 999 000