Loading...
Dr. Paul Dhinakaran

துஷ்டன் உன்னை அணுகுவதில்லை!

Dr. Paul Dhinakaran
08 Jan
துஷ்டனை அடையாளம் காண்பதற்கு வேதம் நமக்கு உதவிச்செய்கிறது. “எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், இருப்பார்கள் (2 தீமோத்தேயு 3:2) என்றும், அவர்கள் பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் என்றும் வேதம் குறிப்பிடுகிறது. தேவனுடைய வார்த்தை நம்மை பாதுகாக்கும்படி நம்மோடுகூட இருக்கிறபடியால், துஷ்டன் இனி நம் வழியாய் கடந்து வருவதில்லை. அவன் சங்கரிக்கப்படுவான். மேலும், “கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அவர் அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்” (நாகூம் 1:7) என்று வேதம் கூறுகிறது. ஆம், நீங்கள் அவரை நம்பியிருக்கும்போது, அவர் ஒருநாளும் உங்களுக்கு தீங்கை அனுமதிக்கமாட்டார்.

தேவனுடைய ஊழியர் ஒருவர் தெருவில் நற்செய்தி அறிவித்தபொழுது, மந்திரவாதி ஒருவன் அதைக்கண்டு மிகவும் கோபமடைந்தான். அவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு பாம்பை அந்த ஊழியக்காரர்மேல் எறிந்தான். கூடியிருந்த மக்கள் இதைக்கண்டு அலறியடித்து ஓடினர். ஆனால், அந்த ஊழியர் கோபப்படவில்லை. அவன் இரட்சிப்பின் ஒளிக்குள் வரவேண்டும் என்று ஜெபித்தார். நாட்கள் சென்றன. ஒருநாள், வாலிபன் ஒருவன் இந்த மந்திரவாதியிடம் சென்று, ஒரு பெண்ணுக்கு விரோதமாய் மந்திரவாதம் செய்ய வேண்டும் என கூறி, அதற்காக ரூ.500/-யும் கொடுத்தான். மந்திரவாதி மந்திரத்தைச் சொல்லும்போது, இயேசு அவன் முன் தோன்றி, “அவள் என்னுடைய மகள், உன்னால் அவளுக்கு எதுவும் செய்ய முடியாது” என்றார். மந்திரவாதி இயேசுவைக் கண்டு ஆச்சரியப்பட்டான். அவன் இயேசுவை விசுவாசித்து புதிய மனிதனானான். பின்பு தேவனுடைய நற்செய்தியை எங்கும் பிரசித்தம் பண்ணுகிறவராய் மாறினார்.
என்ன அற்புதமான மாற்றம் பாருங்கள்! இருண்ட உலகத்திலே, பிசாசின் ஆவிகளோடே விளையாடிக் கொண்டிருந்த ஒரு மனிதன், இயேசுவை சந்தித்த உடனேயே புது சிருஷ்டியாக மாற்றப்பட்டான். பிரியமானவர்களே, இயற்கையின் சீற்றங்கள், வியாதி, மந்திரவாத சக்திகள் ஆகியவை மற்ற ஜனங்களை எளிதில் பாதிக்கிறபொழுது, நீங்கள் பாதுகாப்பாய் இருப்பதே பெரிய ஆசீர்வாதம். உங்கள் மீதுள்ள பாதுகாப்பு வளையம் தங்களுக்கும் வேண்டுமென்று உங்களைச் சுற்றியிருப்பவர்கள் கூறுவர். இவைகள் தான் ஜனங்களை இயேசுவிடம் கொண்டு வரும். நீங்கள் கனப்படுத்தப்படுவீர்கள்.
Prayer:
என்னை நேசிக்கிற அன்பு தகப்பனே,

இயேசு என்ற உம்முடைய நாமத்திலுள்ள ஆச்சரியமான பாதுகாப்புக்காக உமக்கு ஸ்தோத்திரம். உம்முடைய நாமமே எனக்கு அடைக்கலமாக இருக்கிறது. எனக்கெதிராக எழும்புகிற எல்லா ஆயுதமும் வாய்க்காதேபோகப்பண்ணி, அவர்களை வெளிச்சத்திற்குள் வரவழையும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, 

ஆமென்.

1800 425 7755 / 044-33 999 000