Loading...
DGS Dhinakaran

விசுவாசத்தின் தோற்றம்!

Bro. D.G.S Dhinakaran
13 Jun
அன்பிற்குரியவர்களே, விசுவாசத்தைத் துவக்குகிறவரும், அதை முடிக்கிறவரும் நம்முடைய இயேசு கிறிஸ்து ஒருவரே! அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும் என்று வேதம் கூறுகிறது (கலாத்தியர் 5:6). இயேசு கிறிஸ்துவிலிருந்து தான் அன்பும், மனதுருக்கமும் பாய்ந்தோடுகிறது. நோயினால் வாடின அநேகரை அவர் குணமாக்கினார் என்று வேத புத்தகத்தில் எங்கெல்லாம் நாம் வாசிக்கிறோமோ, அங்கெல்லாம், இயேசு “மனதுருகி” அவர்களை குணமாக்கினார் என்று பார்க்கலாம். 

வேதத்தில், குஷ்டரோகி ஒருவன் இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, உமக்கு சித்தமானால், என்னை சுத்தமாக்க உம்மால் ஆகும்” என்றான். இயேசு, அவனுடைய சரீரத்திலுள்ள காயங்களைப் பார்த்து, அவன் மீது மனதுருகி, “எனக்கு சித்தமுண்டு; நீ சுத்தமாகு” என்று சொல்லி அவனை சுகப்படுத்தினார் (மாற்கு 1:40-42). அவருக்குள் இருந்த அன்பும், மனதுருக்கமும்தான் அவனுக்குள் அத்தகைய அசைக்க முடியாத விசுவாசத்தைக் கொண்டு வந்தது. இயேசு கிறிஸ்து, ஒரே நொடியில் அற்புதத்தை செய்து முடித்தார்.
இயேசு கிறிஸ்து, சீமோன் என்னும் ஒரு மனிதனுடைய வீட்டில் தங்கியிருந்தார். அப்பொழுது, பாவத்தில் வாழ்ந்த ஒரு பெண் அவரிடம் வந்து, தன் கண்ணீரை அவருடைய பாதத்தில் சிந்தினாள். இயேசு அவளைப் பார்த்து மனதுருகி, “மகளே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது.... உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது. சமாதானத்தோடே போ” என்று கூறினார். ஆம், பாவத்தினிமித்தம் அவள் படும் வேதனையைக் கண்ட இயேசு அவள் மீது மனதுருகினார். அவளுடைய வாழ்க்கையை மாற்றக்கூடிய விசுவாசம் அவர் உள்ளத்திற்குள் எழுந்து, அவளை இரட்சித்தது (லூக்கா 7:38,39,49,50).

பிரியமானவர்களே, நம் இயேசு இரக்கமுள்ளவர்; மனதுருக்கமுடையவர். ஆகவே, அவருடைய அன்பின்மீதும், மனதுருக்கத்தின்மீதும் நம்பிக்கை வைத்து, “ஆண்டவரே, என் உள்ளத்தில் அப்படிப்பட்ட விசுவாசத்தைத் தாரும்” என்று நாமும் கேட்போம். “...விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி...பொறுமையோடே ஓடக்கடவோம்” (எபிரெயர் 12:1) என்ற வார்த்தையின்படி, அவரை நோக்கி ஓடுங்கள். மலைகள் பெயர்ந்தாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் அசைக்க முடியாத ஒரு தெய்வீக விசுவாசத்தை தேவன் உங்களுக்கு தருவார்.  உங்கள்மீது மனதுருகி உங்கள் தேவைகள் எதுவாயினும் அவற்றை சந்திப்பார். உங்களை ஆசீர்வாதமாய் வைப்பார். 
Prayer:
பரம தகப்பனே,

விசுவாசத்தை துவக்குகிற தேவனே, என்னுள் காணப்படும் அவிசுவாசத்தை களைந்து விசுவாசமெனும் விதையை விதைத்தருளும். ஒவ்வொரு நாளும் அந்த விசுவாச செடி என்னில் வளர்ந்து பெலப்பட கிருபை செய்தருளும். என் வாழ்வில் காணப்படும் இல்லாமையை அகற்றும். அவற்றை விசுவாசத்தால் உம்மிடத்திலிருந்து நான் பெற்றுக்கொள்ளவும், மற்றவருக்கு சாட்சியாய் வாழவும் இரக்கம் பாராட்டும். நீர் நல்லவர், மனதுருக்கமுடையவர். என்மீதும் மனதுருக்கம் வைத்து என்னை இரட்சித்தருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, 

ஆமென். 

1800 425 7755 / 044-33 999 000