Loading...
Stella dhinakaran

உங்கள் பிரயாசங்களை ஆசீர்வதிக்கும் தேவன்!

Sis. Stella Dhinakaran
12 Oct
“கர்த்தருக்கு பயந்து அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்” (சங்கீதம் 128:1) என்று வேதம் சொல்கிறது. ஆபிரகாம் தெய்வ பயத்தோடு தன் வாழ்வில் நடந்ததுபோல், தன் குடும்பத்தாரையும் அவ்விதமான வழிகளையே பின்பற்றும்படி செய்தான். ஆகவேதான், “என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததி” என்று தேவனே அவனுடைய சந்ததியைக் குறித்து சொல்லுகிறார் (ஏசாயா 41:8). அருமையானவர்களே, ஆபிரகாமைப்போன்றே உங்கள் வாழ்வும் கர்த்தரால் ஆசீர்வாதம் பெற்று விளங்கும்படிக்கும், ஆண்டவர் அருளும் நன்மையினால் நீங்களும் நிறையும்படிக்கும், அவனைப் போலவே நீங்களும் உண்மையுள்ள இருதயத்தோடும், பயபக்தியுடனும் கர்த்தரைத் தேட வேண்டும். எனவே, உங்கள் இருதயத்தையும், உங்கள் வாழ்வையும் சீர்தூக்கிப் பாருங்கள்.  

ஒரு அலுவலகத்தில் தெய்வ பக்தியோடும், அதேநேரம் உண்மையோடும் உத்தமத்தோடும் தன் அலுவலகப் பணிகளை கடினமாக உழைத்து நிறைவேற்றி வந்தான் ஒரு வாலிபன். அவன் மேலதிகாரிக்கோ, தன்னைவிட அவன் மேலான நிலைக்கு உயர்ந்துவிடுவானோ என்ற பயத்தோடுகூடிய எரிச்சல், பொறாமை. எனவே, அவனை பல்வேறு கடின வார்த்தைகளால் ஒவ்வொரு நாளும் வேதனைப்படுத்துவார். ஆனால், நடந்ததென்ன தெரியுமா? கர்த்தருக்கு முன்பாக தெய்வ பயத்தோடு பணிபுரிந்த அந்த வாலிபன், தேவனால் அதிவேகமாக உயர்த்தப்பட்டான். மேலதிகாரியோ தன் பெருமையினால் மிகவும் தாழ்த்தப்பட்டான்.
அன்பானவர்களே, தெய்வ பயத்தோடே நாம் எந்த காரியத்தை செயல்படுத்தினாலும், ஆத்துமாவிலேயும், இவ்வுலக வாழ்விலேயும் நன்மையை அனுபவிக்கிற பாக்கியத்தை ஆண்டவர் நமக்கு அருளுவது நிச்சயமான காரியம். அவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும், நீங்கள் கையிட்டுச் செய்கிற எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார். ஆபிரகாமைப்போல  நீங்களும் குடும்பமாய் கர்த்தருக்கு பயந்து அவர் வழிகளை பின்பற்றி தேவ ஆசீர்வாதம் பெறுங்கள். 
Prayer:
ஆண்டவரே,

ஆபிரகாமைப்போல நான் உமக்கு பயப்படும் பயத்தினால் நிறைந்து, அன்றாடக வாழ்வில் உம்மை பிரியப்படுத்துகிற வாழ்வை வாழவும், நீர் அருளும் தெய்வீக நன்மையினால் நிறையவும் எனக்கு கிருபை செய்தருளும். என் இருதயத்தையும், வாழ்வையும் சீர்தூக்கிப்பார்த்து நல்வழிப்படுத்தும் நல்ல தகப்பனே! 

ஆமென். 

1800 425 7755 / 044-33 999 000