Loading...
Paul Dhinakaran

ஜீவ கிரீடம்!

Dr. Paul Dhinakaran
14 Jun
பிரியமானவர்களே, இவ்வுலகம் வேதனையும் துன்பங்களும் நிறைந்தது. அதில் எவ்வளவேனும் சந்தேகமில்லை. ஆனால் இதுபோன்ற நேரங்களில் நீங்கள் எவ்வளவு பலமுள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்பது தான் கேள்வி? சோதனையின் நேரங்களில் எளிதில் உங்கள் நம்பிக்கையை இழந்துவிடுகிறீர்களா? உங்கள் பதில் ஆம் என்றால், இன்றைக்கு நான் உங்களை உற்சாகப்படுத்த விரும்புகிறேன்.  “ (இயேசுவோடுகூட) அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவேராடேகூட ஆளுகையும் செய்வோம்” (2 தீமோத்தேயு 2:12) என்று வேதம் கூறுகிறது. ஆம், பாடுகளை எண்ணி சோர்ந்து பின்வாங்கிப்போவோமானால் நம்முடைய பெலன் குறுகினது. 

தேவனுடைய மனிதன் ஒருவர், தன்னுடைய சோதனைகளுக்காகவும், கவலைகளுக்காகவும் போராடி ஜெபித்தார். அவரை ஆறுதல்படுத்துவதற்காக, தேவன் அவரை தரிசனத்தில் மோட்சத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே அவர் இயேசு கிறிஸ்துவோடு இருந்து ஒவ்வொன்றையும் கவனித்தார். அப்போது, ஒரு பெண்ணின் ஆத்துமா மோட்சத்தை நோக்கி வருவதைப் பார்த்தார். உடனே தேவன் சிங்காசனத்திலிருந்து எழுந்து வந்து, அந்த ஆத்துமாவைத் தழுவி, முத்தமிட்டு, வரவேற்று, “என் அருமையான மகள், பூமியிலே வாழும்போது நீ மிகவும் கஷ்டப்பட்டாய். எல்லாவற்றையும் மிகவும் பொறுமையோடு சகித்தாய். நல்ல போராட்டத்தைப் போராடினாய். வந்து தந்தையின் சந்தோஷத்துக்குள் பிரவேசி” என்றார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த தேவனுடைய மனிதனுக்கு இடி இறங்கியதுபோல இருந்தது. இயேசு அவரைப் பார்த்து, “மகனே, பூமியில் அவள் வேதனையை மட்டும் அனுபவித்தாள். ஆனாலும், அவள் ஒருமுறைகூட என்னை சபித்ததில்லை. ஆகவேதான், நானே சென்று அவளை வரவேற்றேன். நாளொன்று வரும் அன்று நீயும் இப்படிப்பட்ட ஆறுதலை மோட்சத்தில் பெறுவாய்” என்றார்.
எனக்கு அன்பானவர்களே, இது உங்கள் மகிமையின் நம்பிக்கை, சோதனைகளும், துன்பங்களும் தற்காலிகமானவை. அவைகளைப் பொறுமையோடு சகியுங்கள். தேவனுக்கு காத்திருங்கள். நீங்கள் மோட்சம் போகும் நாளில், “என் மகனே, என் மகளே, நீ என்னுடைய இனிய சந்தோஷத்திற்குள் பிரவேசி” என்று சொல்லி ஜீவ கிரீடத்தை உன் சிரசின் மேல் வைப்பார் (யாக்கோபு 1:12). 

உங்கள் பிரார்த்தனைக்கு பதில் இல்லையென்று கவலைப்படாதிருங்கள். எந்த சூழ்நிலையிலும் கர்த்தரையே நோக்கிப் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நிச்சயமாக உங்கள் வாழ்வில் சந்தோஷமும் சமாதானமும் நிறைந்திருக்கும். பூமியிலிருக்கும் ஆசீர்வாதங்களை மட்டுமல்ல இணையற்ற நித்திய ஆசீர்வாதங்களையும் நீங்கள் அனுபவிப்பீர்கள். நாளொன்றில் நீங்கள் பரலோகத்திற்கு செல்லும்போது, இயேசு உங்களை வரவேற்று இவ்வுலக வாழ்வில் உண்மையும் உத்தமமுமாய் இருந்தீர்கள் என்று சாட்சியிடுவார். உங்கள் சிரசில் ஜீவகிரீடத்தை தரிப்பிப்பார். அந்த நாளில் நீங்கள் சந்தோஷமாய் மகிழ்ந்து உயர்ந்த ஆசீர்வாதங்களை பெறுவீர்கள். ஆகவே, தேவனுடைய பாதத்தில் பொறுமையோடுகூட காத்திருங்கள். சோதனைகளை, துன்பங்களை, துயரங்களை கண்டு சோர்ந்து போகாதிருங்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஜீவனுள்ள வார்த்தையை  நம்புங்கள். அவர் உங்களுக்கு சிறந்ததை மட்டுமே தருவார். 
Prayer:
என்னை மிகவும் அதிகமாய் நேசிக்கும் அன்பின் பரலோக பிதாவே, 

இன்றைக்கு நீர் பேசிய ஆசீர்வாத வார்த்தைகளுக்காக நன்றி. தேவனே, என்னுடைய உபத்திரவங்களைப் பொறுமையோடே சகித்து, மகிமையின் நாளிலே கவுரவத்தைப் பெற்றுக்கொள்ள கிருபை செய்யும். என்னை பெலப்படுத்தும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, 

ஆமென். 

1800 425 7755 / 044-33 999 000