Loading...
Dr. Paul Dhinakaran

தெய்வீக சமாதானமும் சந்தோஷமும்!

Dr. Paul Dhinakaran
12 Jan
வாழ்க்கையில் மனிதன் எப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைகளுக்குள்ளாக கடந்துசென்றாலும், அவன் கர்த்தர்மீது நம்பிக்கை வைக்கும்போது. பிரச்சினைகளை மேற்கொள்ளும்படியான கிருபையையும் வெற்றியையும் தேவன் அவனுக்கு அருளுகிறார். இது தெய்வீக சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது. ஆனால் அழிந்துபோகிற இவ்வுலக காரியங்களால் நாம் அதை அடைய முயற்சிக்கிறோம். இந்நாட்களில் ஜனங்கள் மனமுடைந்து போய் காணப்படுகின்றனர். சிலர் தங்களுடைய நெருங்கிய நண்பர்களால் காயப்பட்டிருப்பதால் மனச்சோர்வில் இருக்கின்றனர். வாழ்க்கையில் நீங்கள் மிகவும் நம்புகிற ஒருவர் உங்கள் முதுகுக்கு பின்னால் குத்துகிறார்கள் அல்லவா! எல்லோரும் கேட்கிற கேள்வி, “யார்மீது நம்பிக்கை வைப்பது?”

சிறுவன் ஒருவன் வயல்வெளியிலே விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென அவன் இருண்ட ஆழமான தண்ணீரில்லாத கிணற்றில் விழுந்துவிட்டான். அவன் உதவிக்காக அழுதான். அவனது சத்தத்தைக் கேட்ட கிராமத்தினர் ஓடி வந்து ஒரு கயிற்றை உள்ளே இறக்கிவிட்டு சிறுவனிடம் கெட்டியாக கயிறைப் பிடித்துக்கொள்ளும்படி கூறினர். சிறுவன் கேட்டான், “என் தகப்பனார் கயிற்றின் மறுமுனையிலிருக்கிறாரா?” அதற்கு அவர்கள், “இல்லை” என்றார்கள். ஆகவே, சிறுவன் கூறினான்; “என் தகப்பனார் கயிற்றின் மறுமுனையைப் பிடித்தால் மட்டுமே நான் கயிற்றைப் பிடிப்பேன். நான் அவரை மட்டுமே நம்புவேன்” என்றான். அவர்கள் சென்று தந்தையை தேடிப்பிடித்து அழைத்து வந்தனர். அவர் கூறினார்: “மகனே, நான் இங்கே கயிற்றின் மறுமுனையைப் பிடித்திருக்கிறேன். அதைப் பிடித்துக்கொள்; நான் உன்னை வெளியே தூக்கிவிடுவேன்” என்று, உடனே சிறுவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவன் இறுக்கமாகக் கயிற்றைப் பிடித்துக்கொண்டதினால் அவன் பிழைத்துக்கொண்டான். 
பிரியமானவர்களே, தன் தந்தையின் மீது எத்தனை ஆச்சரியமான நம்பிக்கையை அந்த சிறுவன் வைத்திருந்தான். அவன் மற்றவர்களை நம்பவில்லை. ஆனால், அவன் தன் தகப்பனாரின் சத்தத்தைக் கேட்டதும், அவன் தனக்குள்ளேயே, “என் தந்தை என்னை நிச்சயமாக விட்டுவிடமாட்டார் என கூறிக்கொண்டான். பிரியமானவர்களே, நீங்களும் இயேசுவின் மீது இதேவிதமான நம்பிக்கையை வைத்திடுங்கள்.அவர் உங்களை விட்டுவிடவேமாட்டார். உங்கள் பிரச்சினைகளின் நடுவில் கர்த்தரையே சார்ந்துகொள்ளுங்கள். அவர் எல்லாவித பிரச்சினைகளினின்றும் உங்களை விடுவிப்பார். அவர் பரிசுத்த ஆவியினால் உங்களை நிறைத்து மறுரூபமாக்குவார். “என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குத் தருகிறேன்” (யோவான் 14:27) என்று சொன்ன இயேசு, தமது சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தருவார். ஆகவே, நீங்கள் எதைக்குறித்தும் கலங்காமல் கர்த்தர் தருகிற தெய்வீக இரக்கத்தை பெற்று மகிழ்ச்சியாய் வாழுங்கள். 
Prayer:
அன்பின் பரலோக பிதாவே,

நான் உபத்திரவத்தின் குகையிலிருந்துகொண்டு உம்மை நோக்கி கதறுகிறேன். என்னை என் உபத்திரவத்திலிருந்து விடுவியும். நீர் என்னை ஒருபோதும் விட்டுவிடமாட்டீர் என நம்புகிறேன். சந்தோஷத்தினாலும், சமாதானத்தினாலும் நிரம்பும் நாட்களை நான் காணும்படி செய்யும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

1800 425 7755 / 044-33 999 000