Loading...
கர்த்தர் அற்புதங்களைச் செய்வார்!

 
கிறிஸ்துவுக்குள் விலையேறப்பெற்ற சகோதர சகோதரிகளே, சிறு பிள்ளைகளே,

நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்!

ஒரு புதிய மாதத்தை நாம் தொடங்குகிறோம். தேவாதி தேவன் நம்மை ஆசீர்வாதமான பாதையில் நடத்தி, பரிபூரணமாய் ஆசீர்வதிக்க ஆயத்தமாயிருக்கிறார். யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை பார்த்து, “உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள். நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவில் அற்புதங்களைச் செய்வார்” (யோசுவா 3:5) என்று கூறினார். இது இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட ஒரு வாக்குத்தத்தம். 2 கொரிந்தியர் 1:20ல்,  “தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே” (2 கொரிந்தியர் 1:20) என்று வாசிக்கிறோம். இந்த வாக்குத்தத்தத்தின்படியே, இம் மாதத்தில் நாம் அற்புதங்களை காணப்போகிறோம். நாம் பரிசுத்தமாய் வாழும்படி கர்த்தர் நமக்கு உதவிச் செய்வார்.

பரிசுத்தமாகுதல்:

முதலாவதாக, கர்த்தருக்கு முன்பாக நம்மை நாம் பரிசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் தேவனிடத்தில் பரிசுத்தத்தை கேட்கும்போது, அவர் நம்மை பரிசுத்தமாய் நடத்துவார். மல்கியா 2:11ல், “கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தத்தை யூதா ஜனங்கள் பரிசுத்தக் குலைச்சலாக்கினார்கள்.” பரிசுத்தமில்லாமல் தேவனை தரிசிக்க முடியாது (எபிரெயர் 12:14), அவருடைய ஆசீர்வாதத்தையும் பெறமுடியாது. 

ஒருவராகிலும் கெட்டுப்போகக்கூடாது என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது (மத்தேயு 18:14). ஒருவரும் பொல்லாத வழிகளை பின்பற்றக்கூடாது. பொல்லாங்கன் நம்மை எப்படி வீழ்த்துவது என்றும், தன்னோடு கூட்டாளியாக மாற்றுவது என்றும் வகை தேடுகிறான். இந்த முழு உலகமும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது (1 யோவான் 5:19) என்று வேதத்தில் வாசிக்கிறோம்.

ஜனங்கள் கண்களின் இச்சையினாலும், மாம்சத்தின் இச்சையினாலும், ஜீவனத்தின் பெருமைக்குள்ளாகவும் (1 யோவான் 2:16) நிரம்பியிருப்பதை இந்நாளில் பார்க்கிறோம். இப்படிப்பட்ட காரியங்களின் மத்தியில் நாம் பரிசுத்தமாய் ஜீவியம் செய்வது சாத்தியமா? ஆம், சாத்தியமே. இதைத்தான் வேதம், “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும், அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்களே” (கலாத்தியர் 5:24) என்று கூறுகிறது. அதற்காகவே இயேசுவானவர் சிலுவையில் தம் ஜீவனைத் கொடுத்தார். இயேசு கிறிஸ்துவோடு சிலுவையிலறையப்பட உங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும். இதைத்தான் பவுல் அப்போஸ்தலன் “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்” (கலாத்தியர் 2:20) என்று கூறுகின்றார்.

இன்றைய நாட்களில், ஆண்களும், வாலிபர்களும் குடித்து வெறித்து உங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள். பெண்கள் எந்நேரமும் சண்டையிட்டு நேரத்தை வீணாக்கி ஆண்டவரை விட்டு தூரமாய் விலகிப்போகிறீர்கள். உங்கள் வாழ்க்கையை சோதித்துப் பாருங்கள். சிலுவையை நோக்கிப் பாருங்கள். சிலுவை மாத்திரமே உங்கள் வாழ்க்கையை மாற்றி மறுரூபமாக்கும். உங்களை மீட்டுக்கொள்ளக் கூடிய வல்லமை சிலுவை நாதரிடத்தில் உண்டு. பாவமான காரியங்களை செய்து கொண்டிருப்பவர்களே, நீங்கள் சிலுவையண்டைக்கு வருவீர்களானால் அவர் உங்களை இரட்சிப்பார். அவர் உங்கள் வருகைக்காய் தம் நேசக் கரத்தை நீட்டி காத்திருக்கிறார். “பிதாவே என்னை மன்னியும், பாவத்தை என்னிலிருந்து நீக்கியருளும்” என்று கேளுங்கள். அவர் இப்பொழுதே உங்களுடைய பாவ பழக்கத்திலிருந்து உங்களை விடுதலையாக்குவார். 


மன்றாடுதல்:

இரண்டாவதாக, நீங்கள் ஜெபத்திலே கேட்கிற காரியங்களை கர்த்தர் உங்களுக்கு அபரிமிதமாய் தந்து ஆசீர்வதிப்பார் (எபிரெயர் 3:20). இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். ஏசாயா 58:11ன்படி, அவர் நித்தமும் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் அவரை பற்றிக்கொள்ளும்போது, இம்மாதம் முழுவதும் ‘எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தினால்’ நிரப்பி உங்களை காத்துக்கொள்வார் (பிலிப்பியர் 4:7). சவுல் மறுரூபமடைந்து பரிசுத்த பவுல் என்ற தேவ ஊழியராய் மாறியது போல, நீங்களும் மறுரூபமடையும்படி சிலுவையை நோக்கி பார்த்து உங்கள் பாவங்கள் அனைத்தையும் அறிக்கையிடுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை தருவார். உங்களை தம் மந்தைக்குள் இழுத்துக்கொள்வார். நீங்கள் அவருடைய பிள்ளைகளாய் மாறுவீர்கள். அதுமாத்திரமல்ல, உங்கள் வாழ்க்கையில் என்னென்ன ஆசீர்வாதங்கள் உங்களுக்கு வேண்டுமோ, அவைகள் உங்களுக்கு அருளப்படும். 


இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதம்:

மூன்றாவதாக, இந்த மாதம் உங்கள் வாழ்வில் அற்புதங்கள் நடைபெறுகிற ஒரு மாதமாயிருக்கும். “நீ விசுவாசித்தால், தேவனுடைய மகிமையை காண்பாய்” (யோவான் 11:40) என்ற வார்த்தையின்படியே, நீங்களும் இம்மாதம் அற்புதத்தின் மாத என்று விசுவாசித்தால் தேவ மகிமையை காண்பீர்கள். தேவமகிமை உங்கள்மீது இறங்கி வரும்.

எனக்கு குழந்தை பாக்கியம் இல்லையே, எனக்கு வேலையில்லையே, என்னை நேசிக்க யாருமில்லையே என்று கவலையோடு இருக்கிறீர்களா? கவலைப்படாதிருங்கள்! ஒவ்வொரு காரியமும் சர்வ வல்லவரின் கரத்தால் உங்களுக்கு கொடுக்கப்படும். “அப்பா, நீர்தான் என்னுடைய ஒரே நம்பிக்கை, உம்மை மாத்திரமே பற்றிக்கொண்டிருக்கிறேன்” என்று உங்களை தாழ்த்துங்கள். ஆண்டவருக்கு முன்பாக எவ்வளவாய் தாழ்மைப்படுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாய் உயர்த்தப்படுவீர்கள். தேவனுடைய வார்த்தையை நீங்கள் விசுவாசிக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் உங்கள் வாழ்வில் இடைப்பட்டு அற்புதங்களை செய்வார். நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். நம்முடைய தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட அதிசயங்களை செய்கிறவர். இம்மாதத்தின் ஒவ்வொரு நாளும் சமாதானம் நிறைந்ததாய் காணப்படும். தேவன் தருகிற நிறைவான ஆசீர்வாதமும், பரிசுத்த ஆவியானவருடைய வழிநடத்துதலும் உங்களோடுகூட இருக்கும். நீங்கள் ஆவிக்குரிய ரீதியில் வளர்ந்து இயேசுவோடுகூட எழும்பி பிரகாசிப்பீர்கள். “அப்பா, நான் இதை விசுவாசிக்கிறேன். இது என் வாழ்வில் அப்படியே நடக்கும். என் அவிசுவாசத்தையும், பாவமான வாழ்க்கையையும் மாற்றி, இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதத்தை பெறும்படிக்கு உதவிச்செய்யும். நீர் என்னோடு கூட இருந்தருளும். ஒவ்வொரு நாளும் உம்முடைய சம்பூரண ஆசீர்வாதங்களை நான் பெற்றுக்கொள்ள கிருபை செய்யும்.”
என்று கேட்பீர்களா? 

Links of July 2018 Blessing Message Video
Hindi Click here
Tamil Click here
Malayalam Click here
Telugu Click here
Kannada Click here
Assame Click here
ஜெபம்:

விலையேறப்பெற்ற எங்கள் பரலோக பிதாவே, ஒரு புதிய மாதத்தை நாங்கள் துவங்கியிருக்கிறோம். நீர் எங்களை ஆசீர்வதிததால் ஒழிய நாங்கள் ஒரு ஆசீர்வாதத்தையும் பெறமுடியாது. பாவக்காரியங்களை நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருப்போமானால், உம்முடைய ஆசீர்வாதத்தை இழந்து போவோம். உம்முடைய பிள்ளையை நினைத்தருளும். உம்மை நோக்கி கண்ணீர் விட்டு கதறுகிறேன். என் ஜெபத்தை கேட்டு அடிமைத்தனத்திலிருந்து என்னை விடுவியும். என் வாழ்வை கழுவி சுத்திகரியும். கர்த்தாவே, உமது பாதுகாப்பை, ஆசீர்வாதத்தை, சமாதானத்தை எனக்கு தந்தருளும். என்னை புதிய மனிதனாய் மாற்றும். உமக்கு முன்பாக என்னை தாழ்த்துகிறேன். என் ஜெபத்தை கேட்டு என்னை பரிசுத்தமாய் மாற்றி அற்புதத்தை காணு கிருபை செய்தருளும். இம்மாதம் முழுவதும் அற்புதங்களை காணும்படியாக என் கண்களை திறந்தருளும். நீர் பரிசுத்தராயிருக்கிறது போல, நானும் பரிசுத்தமாய் இருக்க கிருபை செய்தருளும். ஆமென்.

அன்பானவர்களே, நீங்கள் இதை விசுவாசித்தால் இம்மாதம் முழுவதும் தேவனுடைய ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்வீர்கள். இன்றைக்கு உங்களை பரிசுத்தப்படுத்திக் கொள்ளுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். இது ஆசீர்வதிக்கப்பட்ட மாதம்.